செந்தில் பாலாஜியின் ஆற்றுமணல் வீடியோ…. இதுதான் திமுகவுக்கும் மநீமக்கும் உள்ள வித்தியாசம் என கமல் விமர்சனம்…

ஆற்றுமணல் அள்ளுவது தொடர்பாக கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் பழைய பிரச்சார வீடியோக்கள், மேடை உளறல்கள், பகிரங்க மிரட்டல் என அனைத்தும் மீண்டும் மக்களிடையே வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என பேசியிருந்தார்.

ஆனால் இந்த வீடியோ மணல் கொள்ளை குறித்து திமுக பகிரங்கமாக பேசுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் “தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்” என தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டு கட்சி தொண்டர்களும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.