விஞ்ஞானியோட மூளையே தனிதாய்யா… மீண்டும் விமர்சனத்துக்கு ஆளான செல்லூர் ராஜூ…

மக்களால் ‘விஞ்ஞானி’ என அழைக்கப்படும் அளவுக்கு இணையதளத்தை கலக்கி வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இவர் ஏப்ரல் 6ம் தேதி, மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்திருந்தார்.

பொதுவாக வாக்களிக்க வருவோருக்கு அங்கிருக்கும் தேர்தல் அலுவலர்கள் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்துகின்றனர். அதன்பின் வலது கையில் அங்கு வழங்கப்படும் பாலித்தீன் கையுறைகளை அணிந்து கொள்ள அறிவுறுத்திகின்றனர். அதனைத்தொடர்ந்து இடது கையில் மையிடப்பட்டு, வாக்கு இயந்திரம் அருகே வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கைகளை சுத்தம் செய்தபின் இடது கைவிரலில் மையிட்டு கொண்டார். அதன்பின் அவருக்கு வழங்கப்பட்ட கையுறையை அதே இடதுகையில் போட்டுக்கொண்டபடி, வாக்கு இயந்திரம் அருகே சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அதன்பின் வாக்களித்த இடத்திலேயே நின்று அவர், கையுறை அணிந்த இடது கை விரலை உயர்த்தி காண்பித்து போஸ் கொடுத்தார். அப்போது தான் வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் அவரை கவனித்துள்ளனர்.

அவர் இடது கை விரலால் வாக்கு இயந்திரத்தின் பொத்தானை  அளுத்தினாரா அல்லது வலது கை விரலை பயன்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் கொரோனா நடைமுறையை பின்பற்றினாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனிடையே செல்லூர் ராஜூவின் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், விஞ்ஞானி விஞ்ஞானி தான்ய்யா … எப்பவுமே வித்தியாசமாதான் யோசிக்கிறார் என வலைதளத்தில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அவர் வைகை அணையில் நீர் ஆவியாகுதலை தடுக்க தெர்மகோலை போட்டு கணக்கு காட்டியிருந்தார். இந்த செயல் மூலமாக அவர் மக்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.