ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்…

திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. இதை அடுத்து, திமுக மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக, மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம், மு.க.ஸ்டாலின் வழங்கியதாகவும், ஆட்சி அமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பு விடுப்பார் எனவும் கூறினார்.

Back to top button