ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்… இன்று ஆளுநருடன் சந்திப்பு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று 6வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மே 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இதனிடையே திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.  இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதனை எடுத்துக்கொண்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

அங்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.  கொரோனா பரவல் காரணமாக கவர்னர் மாளிகை வளாகத்திலேயே எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button