தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் அதிகரித்து வருகின்ற சூழலில் “அனைவருக்கும் தடுப்பூசி” எனக் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி” என்ற முடிவினை எடுத்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலை தாக்குதல் இவ்வளவு படுமோசமாக பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அலட்சிய மனப்பான்மையும் – அஜாக்கிரதையான நிர்வாகமுமே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

உயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை “திருவிழா” என்று பெயர் சூட்டி தனது அரசின் நிர்வாக அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் மோடி அக்கறை காட்டுகிறார் என்றும் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு மட்டுமல்ல – மத்திய பா.ஜ.க. அரசும் தோல்வியடைந்து விட்டது என குற்றம்சாட்டியிருக்கும் ஸ்டாலின்தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை கேட்டு கொண்டுள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் – தவறாமல் முகக்கவசம் அணிந்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button