திருடிய செல்போன்களை திருட்டு ரசீது வைத்து விற்ற பலே திருடர்கள்.!

 

சென்னை கொளத்தூரில் பூட்டியிருந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிச் சென்ற கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை ராஜமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை புழல் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள மேற்கு கிரிஜா நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பார்த்திபன் கடையை பூட்டிச் சென்ற நிலையில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தசரதன் அவ்வழியாக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உரிமையாளருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் பார்த்திபன் அங்கு சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 13 விலை உயர்ந்த செல்போன்கள் உட்பட மொத்தம் 28 செல்போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பார்த்திபன் இச்சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்து சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணையில் ஒவ்வொரு செல்போன்களும் விற்கப்பட்டு சென்னை மட்டுமல்லாது வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னையில் விற்கப்பட்டுள்ள செல்போனுக்கு குறிவைத்த காவல்துறையினர் அதனை பின் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மணலி பகுதியில் வெல்டிங் பணி செய்து வரும் டேவிட் (20) என்பவர்தான் தனது கூட்டாளிகளின் உதவியுடன் கடையை உடைத்து செல்போன்களை திருடியுள்ளார் என்பது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அம்பலமானது.

இதனையடுத்து மணலியில் வைத்து டேவிடை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திருடிய செல்போன்களை அடகுக் கடையில் அடமானம் வைத்து பின் வேறொருவர் மூலம் அதை மீட்டு அந்த ரசீதை வைத்து தங்களுக்கு பணத் தேவை இருப்பதாக பொய் சொல்லி பல்வேறு நபர்களிடம் செல்போன்களை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அதில் டேவிடுடன் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் நெல்சன் (20) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த மணிகண்டன் (18) ஆகியோரையும் ராஜமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 9 விலை உயர்ந்த செல்போன்களை மீட்ட காவல் துறையினர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதுமட்டுமல்லாமல் மீதமுள்ள செல்போன்களை மீட்கும் பணியையும் காவல் துறையினர் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button