தமிழகத்தில் புதிய கட்டுபாடுகள்… தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி..!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன், தியேட்டர்கள், காய்கறி சந்தைகள், கேளிக்கை விடுதிகளில் 50 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்

நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டுமே செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, பொது மற்றும் தனியார் பேருந்துகள், பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

அதேபோல், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பேருந்துகளிலும், இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், மற்றும் பெரிய கடைகளில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த வேண்டும்..

கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்..

அனைத்து திரையரங்குகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதிஊர்வலங்களில் 50 பேர்களுக்கு மிகாமலும் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை..

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சின்னத் திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறலாம் என்றும் ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்கும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேர் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் விதமாக இ பதிவு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்போர் வெளியே வராத வகையில், 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது