எடப்பாடியை உறவுக்கொண்டாடி உருகவைத்த ஓ.பி.எஸ் குடும்பம்…கண்ணீர் மல்க ஓ.பி.எஸ் தாயிடம் ஆசிப்பெற்றார்…

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ள நிலையில், அவ்வப்போது பல ருசிகர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியும் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சுறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு களைப்போடு காணப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது நண்பரான ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மூலம் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.

தேனி போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது ஓ.பி.எஸ் செய்த சாதனைகளை குறிப்பிட்டு அவரை முதல்வர் புகழ்ந்திருந்தார்.

குறிப்பாக ஓ.பி.எஸ்-ஐ அண்ணன் என்று குறிப்பிட்டு பேசிய இ.பி.எஸ், பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு மட்டுமல்லாது தேனி மாவட்டத்துக்கே நலத்திட்டங்களை செய்துள்ளதாக கூறினார். அதனோடு நிற்காமல், ஓ.பி.எஸ்ஸின் சாதனைகளையும் பட்டியிலிட்ட அவர், ஓ.பி.எஸ் ‘இறைவனால்’ உங்களுக்கு கொடுக்கப்பட்ட ‘கொடை’ என புகழ்ந்தார்.

இதனை கண்டு பிரமித்துப்போன ஓ.பி.எஸ், பிரச்சாரம் முடிந்த கையோடே முதல்வரை அழைத்துக்கொண்டு சுப்புராஜ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு நேரம் என்றும் பார்க்காமல் அங்கு இ.பி.எஸ் வருகைக்காக காத்திருந்த ஓ.பி.எஸ் குடும்பத்தினர், உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, இ.பி.எஸ்ஸின் பரப்புரையால் நெகிழ்ந்து போன ஓ.பி.எஸ், நேரடியாக வீட்டிற்குள் இருந்த தனது தாயார் ஓ.பழனியம்மாளிடம் அழைத்து சென்று அண்ணன் இ.பி.எஸ் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருவரின் அந்நியோன்யத்தை கண்டு மனமகிழ்ந்துபோன அவர், ‘நல்லா இருங்கப்பா’ என இருவரையும் வாழ்த்தியுள்ளார். மேலும் அவர்களது குடும்ப குல வழக்கப்படி, இ.பி.எஸ்-ஐ கிட்ட வரவழைத்து நெற்றியில் விபூதி பூசி ஆசீர்வதித்துள்ளார்.

ஒரு காலத்தில் விரோதியாக எண்ணிய ஓ.பி.எஸ்ஸின் குடும்பம் தன்னிடம் காட்டிய அன்பு, மரியாதையை பார்த்து மனம் நெகிழ்ந்து போல இ.பி.எஸ் கண்ணீர் மல்க பழனியம்மாள் காலில் விழுந்து ஆசிப்பெற்றுள்ளார்.

அதற்கு பின் ஓ.பி.எஸ் வீட்டில் முதல்வருக்கு தடபுடல் விருந்தும் வைக்கப்பட்டுள்ளது. அப்போது முதல்வரை சுற்றி வந்த ஓ.பி.எஸ் மகன்கள் ஆசையாக ‘பெரியப்பா’ என்றும், அவரது பேரக்குழந்தைகள் ‘தாத்தா, தாத்தா’ என்று கூப்பிட்டும் அன்புமழை பொழிந்துள்ளனர். இதைப்பார்த்ததும் தனது சொந்த வீட்டிற்கே வந்துவிட்டதாக முதல்வர் உணர்ந்துள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது எடப்பாடிக்குக் கிடைத்த சென்டிமென்ட் வரவேற்பு, அவை எல்லாம் பொய் என்று சொல்லும் அளவுக்கு நிலைமையை மாற்றியுள்ளது.

இதெல்லாம் தேர்தல் சூட்சமமா? என புறம் கேள்வி எழும்ப, இல்லை இந்த உபசரிப்பு இருவரின் இடையிலான உறவை வலுப்படுத்தும் எனவும் தேனி அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.