உங்களுக்கு முருகன் துணையிருப்பான்… ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஸ்டாலினுக்கு வாழ்த்து!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வருகிற 7ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விடுத்துள்ள கோரிக்கையில், கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி உங்களை வந்தடைந்திருக்கிறது. விழிப்போடு செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற விரைவாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்களின் கவனத்திற்கு ஒரு சிறிய கருத்தை கொண்டுவர விரும்புகிறேன்.

கொரோனா பரிசோதனை செய்து நோயாளியை அடையாளப்படுத்திய பிறகு, அவர்களுக்கு உரிய மருந்தை அவர்கள் இல்லங்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளையே சென்று மருந்தை வாங்கிக்கொள்ளச் சொல்வதாக அறிகிறேன். நோயாளிகள் வெளியில் சென்றால் நோய் மிக எளிதாக பரவும். அதேபோல், மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும் அவர்களாக சென்று மருத்துவமனையில் சேர்வதால் நோய் தொற்று எளிதில் பரவுகிறது. அவர்களையும் வீட்டில் வந்து அழைத்து செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்தால் நோய் தொற்றை குறைக்கலாம். கொரோனா நோயாளிகளுக்கென தனி அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.

சிறந்த முறையில் செயல்பட்டு, மக்கள் நலன் காக்க போராட இருக்கும் தங்களுக்கு என் அப்பன் முருகப்பெருமான் துணை இருக்க வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

Back to top button