வீட்டின் அருகே ரகசிய குழி… மூடநம்பிக்கையால் 2 பேர் உயிரிழப்பு

பேராசை பெருநஷ்டம் என்பார்கள். அதனுடன் மூட நம்பிக்கையும் சேர்ந்தால் உயிருக்கும் நஷ்டம் என்பது போல், தூத்துக்குடியில் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாமல், 6 மாதங்களாக தோண்டிய 60 அடி ஆழ ரகசியக் குழியில், 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை பலரும் உணர விரும்புவதில்லை. தங்கள் வாழ்வுக்காகவும், வசதிக்காவும், தங்களது நம்பிக்கை பல அற்புதங்களை செய்யும் என நம்பும் சிலர், நரபலி கொடுப்பது, நிர்வாண பூஜை செய்வது போன்ற ஆபத்தான காரியங்களில் இறங்குவது இன்னும் தொடர்கதையாகவே உள்ளது.

அவ்வகையில் ஒரு  சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது தூத்துக்குடியில்… சாத்தான்குளம் அருகே உள்ள நாசரேத் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது வீட்டில் புதையல் இருப்பதாக ஒரு கேரள நம்பூதிரி கூறிதை நம்பி, ஆறு மாதங்களாக அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல், வீட்டைச் சுற்றி சேலைகளைக் கட்டி, இரவு நேரங்களில் மட்டும் ரகசியமாகக் குழி தோண்டியுள்ளனர், அவரது குடும்பத்தினர்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக முதல் 15 அடியை 10 அடி விட்டத்தில் தோண்டியவர்கள், அதற்கடுத்து 4 அடி விட்டத்தில் சிறு குழி போல ஆரம்பித்து கீழே செல்லச் செல்ல 5 அடி, 6 அடி என படிப்படியாக அதிகரித்து, 10 அடி விட்டம் வரை, சுமார் 60 அடி ஆழத்திற்கு கூம்பு வடிவில் வித்தியாசமான குழியைத் தோண்டியுள்ளனர்.

பின்னர் கடந்த 6 மாதங்களாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் குழிக்குள் இறங்கி, விசேஷ பூஜைகள் செய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, முத்தையாவின் மகன்களான சிவமாலை, சிவவேலன் ஆகியோருடன், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ரகுபதி மற்றும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த நிர்மல் கணபதி ஆகியோரும் குழிக்குள் இறங்கி பூஜை செய்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரகுபதி மற்றும் நிர்மல் கணபதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணைக்குப் பிறகே முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இத்தகைய மூட நம்பிக்கைகள் இன்னும் குறைந்த பாடில்லை