தேர்தல் முடிவு வெளியாகுவதற்குள் வீரபாண்டி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் தொகுதி மக்கள்…

தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கும் எண்ணும் பணி வருகிற மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுக்காக வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த தேர்தலில் சேலம் மாவட்டம் மல்லூர் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த மோகன் பாபு என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டார். வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவருக்கு வைரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 61 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. தேர்தல் களத்தில் இறங்கிய அவர், வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில், தேர்தலுக்கு பின் வீட்டில் ஓய்வில் இருந்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டு குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். இதில் கால் தடுமாறி கீழே விழுந்து, தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தேர்தல் முடிவு வெளியாகுவதற்கு முன்பாகவே ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button