எடப்பாடி தொகுதியை கைப்பற்ற போவது யார்..? ஒரு அலசல் ரிப்போர்ட்

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக எடப்பாடி உள்ளது. 1951-ம் ஆண்டு எடப்பாடி ஆனது சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது.

இந்த தொகுதியில், வன்னியர், கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினர் அதிகளவு உள்ளனர்.

கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பா.ம.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தொகுதியில் ஆண்கள்- 1,44,757 பேர், பெண்கள் -1,39,597 பேர், மூன்றாம் பாலினத்தினர் – 24 பேர் என மொத்தம் – 2,84,378 வாக்காளர்கள் உள்ளனர்.

எடப்பாடி தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு, நான்கு முறை வெற்றி பெற்ற முதல்வர் பழனிச்சாமி, தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார்.

காவிரி ஆறு ஓடக்கூடிய எடப்பாடி பகுதியில் சுற்றிலும் ஏரிகளும், குளங்களும் உள்ளன. குறிப்பாக அரிய வகை பாறைகள் உள்ளன. காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள எடப்பாடி தொகுதியில் நெசவும், விவசாயமும் பிரதான தொழில்கள். கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி மற்றும் சுடிதார் மெட்டீரியல்கள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த தொகுதியில் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்கு காரணம், முதல்வராக இருந்து, சரபங்கா திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மாவட்டம் முழுவதும் அவர் கொண்டு வந்ததே என கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் சம்பத்குமார், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு வன்னியர் சமூக வாக்குகள் பெருமளவில் கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிய காரணத்தால், எடப்பாடி பழனிசாமியே, தொகுதியில் உள்ள பெரும்பான்மையான வன்னியர் வாக்குகளை அறுவடை செய்வார். அத்துடன் கடந்த தேர்தலில், தனித்து போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்ற பாமக, தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதால், முதல்வர் பழனிசாமியின் வெற்றி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என தொகுதி மக்கள் கூறுகின்றனர்.