சேலம் மேற்கு தொகுதியை கைப்பற்ற போவது யார்..? ஒரு அலசல் ரிப்போர்ட்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்புக்கு பின் 2011ம் ஆண்டு சேலம் மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது.

சேலம் இரும்பாலை, சேலம் ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகம், ஜங்ஷன் ரெயில் நிலையம், சேகோசர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் சேலம் மேற்கு தொகுதியில் அமைந்துள்ளது.

இங்கு வெள்ளிப்பட்டறை, கயிறு திரிக்கும் தொழில் மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இந்த தொகுதியில் வன்னியர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர், கொங்கு வேளாளர் கவுண்டர்கள், போயர், நாடார் என பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

மேற்கு தொகுதி உருவான பின் நடந்த இரு சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிப்பெற்றுள்ளது.

நடப்பு தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த அருள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் சேலத்தம்பட்டி ராஜேந்திரன் களமிறங்கி உள்ளார்.

இருவருமே தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால், போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது.

கடந்த தேர்தலில், இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர், 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார். அத்துடன் தனித்து நின்ற பாமக, இந்த தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது.

நடப்பு தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொருளாதார பலம் மிகுந்தவர் என்பதால், பாமக வேட்பாளருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த தொகுதியில் முதல்வரின் வீடும் இருப்பதால், தொகுதியின் வெற்றி முதல்வருக்கு கௌரவ பிரச்சினையாக இருக்கிறது.

இந்த தொகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், முக்கிய மேம்பாலங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள், அதிமுக ஆட்சிக் காலத்திலே கொண்டு வரப்பட்டுள்ளது. அது அதிமுகவிற்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே சேலம் மேற்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் தொழில் பாதுகாப்பு, தனி நலவாரியம் அமைத்தல், வெள்ளி கொலுசுக்கு காப்புரிமை, தொழில் பூங்கா அமைப்பது, அரசின் வளர்ச்சி திட்டங்கள் பெறுவது உள்ளிட்டவை வெள்ளி தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Back to top button