சங்ககிரி தொகுதியை கைப்பற்ற போவது யார்..? ஒரு அலசல் ரிப்போர்ட்

மகுடஞ்சாவடி, சங்ககிரி, தாரமங்கலம் ஆகிய 3 ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கியது சங்ககிரி தொகுதி. இங்கு பெரும்பான்மையாக வன்னியர் சமுதாயம் உள்ளது. அடுத்தபடியாக கவுண்டர், அருந்ததியர் என அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.

கடந்த 1971 முதல் 2016 வரை, நடைபெற்ற 11 சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க., 7 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொகுதியில் ஆண்கள்- 1,38,013, பெண்கள் – 1,35,110, திருநங்கைகள் -20 என மொத்தம் – 2,73,143 வாக்காளர்கள் உள்ளனர்.

நடப்பு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் சுந்தர்ராஜன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் சரவணன் என்பவர் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் வன்னியர் சமூக மக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ஆனாலும், திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பிலும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில், இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். மேலும் தனித்து நின்ற பாமகவும், இந்த தொகுதியில் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றது. எனவே தற்போதைய தேர்தலில் அதிமுக- பாமக இடையிலான கூட்டணி கூடுதல் பலம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடியின் மாமனார் வீடு அமைந்துள்ளது. அத்துடன் இந்த தொகுதியில் அதிமுக தேர்தல் பணிகள் அனைத்தும், முதல்வரின் மைத்துனர் மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. அதனால், சங்ககிரி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி அதிமுகவே முன்னிலையில் உள்ளது.

லாரி தொழிலை பிரதான தொழிலாக கொண்டது சங்ககிரி. அதை சார்ந்து பல்வேறு தொழில்களும் உள்ளதால், ஒருங்கிணைந்த ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்பது மக்களின் நெடுநாள் கோரிக்கை.சங்ககிரி மலைக்கோட்டையை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

Leave a Reply

Back to top button