ஆத்தூர் தொகுதியை கைப்பற்ற போவது யார்.?

சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட முக்கிய நகராட்சிகளில் ஒன்றான ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு, ஆத்தூர் தனி தொகுதி அமைந்துள்ளது. இங்கு ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வாழை, மரவள்ளி, மஞ்சள், பருத்தி, நெல், வெற்றிலை ஆகியனவும் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர, பாக்கு மரமும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள் மற்றும் நெல் அறுவடை எந்திரங்கள் ஆகியன கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. ஜவ்வரிசி உற்பத்தியிலும் இந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

இந்த தொகுதியில் ஆண்கள்: 1,22,440. பெண்கள்: 1,31,348. திருநங்கைகள் 12 என மொத்தம்: 2,53,800 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியன தலா 4 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டு, சின்னத்துரை என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து, அதிமுக சார்பில் ஜெயசங்கரன் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில், இங்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இம்முறை இங்கு திமுக நேரடியாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திமுகவில் போட்டியிடும் வேட்பாளருக்கு கூட்டணி கட்சிகள் சற்று கூடுதல் வாக்குகளை பெறுவதற்கு உதவும். அதே சமயம், கடந்த தேர்தலில், தனித்து போட்டியிட்ட பாமக, 18 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றதால், அது அதிமுகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதனால், ஆத்தூர் தொகுதியில் அதிமுகவே முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோரிக்கை: மேட்டூர் காவிரி உபரிநீரை ஆத்தூர் பகுதியில் உள்ள வசிஷ்டநதியில் இணைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.

மேலும் ஆத்தூர் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். காமராஜர் மற்றும் சேலம் சாலைகள் இணையும் பகுதி மற்றும் மஞ்சினி செல்லும் சாலையில் உள்ள விருத்தாச்சலம் ரயில்வே கேட் பகுதியிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும் மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.

Leave a Reply

Back to top button