மேட்டூர் தொகுதியை கைப்பற்ற போவது யார்..? ஒரு அலசல் ரிப்போர்ட்

சில தொகுதியில் வெற்றிபெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்கிற சென்டிமென்ட் உண்டு. அத்தகைய சென்டிமென்ட் தொகுதிகளில் ஒன்று மேட்டூர். தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை இந்த தொகுதியில் தான் உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையம், மால்கோ, கெம்பிளாஸ்ட், ஜேஎஸ்டபிள்யூ போன்ற தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன. விவசாயம், மீன்பிடி தொழில் ஆகியன இங்கு பிரதான தொழில். இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினரே அதிகம் வசிக்கின்றனர்.

மேட்டூர் வட்டத்துக்கு உட்பட்ட காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூணான்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குந்தம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. மேலும், மேட்டூர் நகராட்சி,மேச்சேரி, கொளத்தூர், வீரக்கல்புதூர், பி.என்.பட்டி ஆகிய பேரூராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளது.

மேட்டூர் தொகுதியில் ஆண்கள்- 1,43,362 பேர், பெண்கள்- 1,38,021 பேர், பிற பாலினத்தவர்- 4 பேர் என மொத்தம் 2,81,387 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் அதிமுக., 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பிரஜா சோசலிச கட்சி 2 முறையும், இந்திய பொதுவுடமைக் கட்சி, திமுக, பாமக., தேமுதிக., ஆகியன தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நடப்பு தேர்தலில், அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் மினரல் சதாசிவம் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, திமுக சார்பில் சீனிவாசபெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருவருமே, தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால், போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் நகர்புற பகுதிகளில் திமுக செல்வாக்குடன் உள்ளது. மேச்சேரி ஒன்றியத்தில் அதிமுகவும், கொளத்தூர் ஒன்றியத்தில் பாமகவும் வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ளன. இதில் மேச்சேரி ஒன்றியமே தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தொகுதியில் பாமகவுக்கு, அதிமுகவின் செல்வாக்கு பலம் என்றாலும், திமுக வேட்பாளருக்கு, சேலம் எம்.பி பார்த்திபனின் களப்பணி கூடுதல் பலம் என கூறப்படுகிறது.

மேலோட்டமான பார்வையில், பாமக முன்னிலையில் இருப்பது போல தோன்றலாம். ஆனால் திமுக – பாமக இடையே கடுமையான போட்டியே நிலவுகிறது.

அதனால், மேட்டூர் தொகுதியை பொறுத்தவரை வெற்றி என்பது இரு தரப்புக்கும் இழுபறியாகவே உள்ளது. மேட்டூரை சுற்றுலாத் தலமாக்க போதுமான நடவடிக்கைகள் இல்லை என்பதே இப்பகுதி மக்களின் குறை.

Leave a Reply

Back to top button