ஓமலூர் தொகுதியை கைப்பற்ற போவது யார்..? ஒரு அலசல் ரிப்போர்ட்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தொகுதியில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களே அதிகம் உள்ளனர்.

2016-ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நடப்பு சட்டமன்ற தேர்தலில், ஓமலூரில் அதிமுக சார்பில் ஆர்.மணி மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆர்.மோகன் குமாரமங்கலம் என்பவரும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் மணி, தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அத்துடன், கடந்த தேர்தலில், தனித்து போட்டியிட்ட பாமக, 48 ஆயிரம் வாக்குகளை பெற்றது அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.

இதில், காங்கிரஸ் வேட்பாளரான மோகன் குமாரமங்கலம், பாரம்பரிய குமாரமங்கலம் குடும்பத்தை சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் வசிக்கும் இவர், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். தொகுதியில், இவரது சமூக வாக்குகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்கு வங்கி இல்லை. அதனால், திமுக மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கி உள்ளார்.

அதனால், தற்போதைய நிலவரப்படி, ஓமலூர் தொகுதியில் அதிமுகவே முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோரிக்கை: ஓமலூரில் உற்பத்தியாகும் பூக்கள் ஐதராபாத், பெங்களூர்,டெல்லி போன்ற மாநிலங்களுக்கும், மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதம் வரும் பூக்கள் மறுநாள் மலர்ந்துவிடுவதால் அவைகள் குப்பைகளில் வீசப்படுகின்றன. இதைத்தவிர்க்கவும், விவசாயிகள் பயன்பெறும் நோக்கிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு கோரைப்பாய் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பதும் அவர்களது நெடுநாள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Back to top button