இந்தியாகவர் ஸ்டோரி

பழங்குடி மக்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும்.! அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பழங்குடி அமைப்பு.!

இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்றும், வரும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அந்த மதத்திற்கென தனி அட்டவணையை உருவாக்க வேண்டும் என பழங்குடிகள் மத ஒருங்கிணைப்பு குழு National Adivasi-Indigenous Religion Coordination Committee (NAIRCC) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அதோடு பழங்குடி மதத்தை கணக்கெடுப்பில் சேர்த்த ஆந்திர மாநில அரசுக்கும் நன்றியை தெரிவித்துள்ளது.

பழங்குடிகள் மத ஒருங்கிணைப்பு குழுவின் (NAIRCC) தகவலின் படி இந்திய மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் 8.6%க்கும் அதிகமாக இருக்கிறார்கள். அரசு ஆவணங்களில் 1871-1892 வரை இவர்கள் பூர்வகுடி மக்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் 1901-1942 வரை அனிமீஸ்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு அட்டவணை பழங்குடிகள் என்று அழைக்கபட்டுள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ராமராவ் டோரா கூறுகையில் “நாங்கள் அடையாளம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுளோம், இந்திய அரசு பல ஆண்டுகளாக எங்கள் மத அடையாளத்தை எங்கும் குறிப்பிடவில்லை. ஹிந்து மதத்தில் எங்களை சேர்ப்பதன் மூலம் எங்கள் அடையாளத்தையும், அரசியல் அமைப்பு உரிமைகளையும் இழந்துளோம். எனவே மத்திய அரசு 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எங்கள் பழங்குடி மதத்திற்கென தனி அட்டவணையை உருவாக்க வேண்டும். இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. பல தசாப்தங்களாக இதை வலியுறுத்தி வருகிறோம். நாடு முழுவதும் உள்ள பழங்குடி மக்கள் நன்மைக்காக மத்திய அரசு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பழங்குடி மதத்தை சேர்க்கவேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பழங்குடி மக்கள் போதிய கல்விஅறிவு மற்றும் மொழி வேறுபாடு காரணமாக தொடர்ந்து எங்கள் மதத்தை கடைபிடிக்க முடியவில்லை. மேலும் பிற மதங்களின் ஊடுருவல் காரணமாக எங்கள் கலாச்சாரம் மற்றும் மத- அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார். இவர்கள் கோரிக்கையை மத்திய அரசு செவிசாய்க்குமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button