அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்…

வன்முறையை தூண்டுவதற்கான முகாந்திரம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றிதழை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது திடீரென நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே திரண்ட டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பேசிய டிரம்ப், தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
இது வைரலானதை தொடர்ந்து அந்த வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் தங்கள் பக்கத்திலிருந்து நீக்கின. மேலும் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வன்முறையை தூண்டுவதற்கான முகாந்திரம் இருப்பதால் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், தனது சுதந்திரமான பேச்சை தடை செய்வதற்கு டிவிட்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சியினருடனும் இடதுசாரிகளுடனும் இணைந்து தன்னை பதவியில் இருந்து இறக்குவதற்காகவும் தன்னை மெளனமாக்குவதற்காகவும் ஒன்றிணைந்துள்ளனர் என அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.