இந்தியாஉலகம்செய்திகள்

அமெரிக்காவில் வேலை … இந்தியர்களின் ஆசைக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் அரசு…

அமெரிக்காவில் ஆண்டுக்கு பல்துறை சார்ந்து பணிபுரிய 85 ஆயிரம் எச் -1 பி விசாக்களை அந்நாட்டு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு மக்கள் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச் -1 பி விசா திட்டத்தை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்புகளை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்காவில் மனித இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகளவில் இருந்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் அங்கு வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தது. இதனால் அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பை தக்க வைத்து கொள்ள அதிபர் ட்ரம்பின் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு நடவடிக்கையாக வெளிநாட்டு மக்கள் அமெரிக்கா சென்று வேலை பார்க்க வழங்கப்படும் எச் -1 பி விசா திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடானது டிசம்பர் முதல் வாரத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வேலை வாய்ப்பானது அமெரிக்கர்களுக்கே ஒதுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த புதிய விதியால் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எச் -1 பி விசா வைத்திருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வரும் நிலையில் ஐ.டி, மருத்துவம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த வெளிநாட்டு மக்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் என அமெரிக்க வர்த்தக குழுக்கள் தெரிவித்துள்ளன. மேலும் அமெரிக்காவில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையால் எச் -1 பி விசா திட்டம் அவசியம் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.

அதேசமயம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பின் செயல் இயக்குநர் கென்னத் குசினெல்லி, எச் -1 பி விசா திட்டத்தின் மூலம் சில நிறுவனங்கள் திறமை, அதிக சம்பளம் பெறும் அமெரிக்கர்களை தவிர்த்து விட்டு, குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் பொருளாதார நிலையை காரணம் காட்டி எச்1 பி தொழிலாளர்கள் மற்றும் வேறு சில விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button