கவர் ஸ்டோரி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ‘வாசிம் ஜாபர்’ மேல் சுமத்தப்பட்ட மதவெறி குற்றச்சாட்டு.! நடந்தது என்ன?

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் ஜாம்பவான் வீரரான ‘வாசிம் ஜாபர்’, மத ரீதியான தாக்குதலை எதிர்கொண்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அவரின் கீழ் ஆடிய இந்திய வீரர்கள் வாய் திறக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் வாசிம் ஜாபர். சர்வதேச அளவில் பிரகாசிக்க முடியாவிட்டாலும், இந்திய உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர், அதிக ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடிய வீரர், 8 முறை ரஞ்சி கோப்பை வென்ற அணியில் இருந்து அதில் இரண்டு முறை ரஞ்சி வென்ற அணியின் கேப்டனாக இருந்தவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர். அத்தகைய ஜாம்பவான் வீரர் தான் தற்போது மத ரீதியான விமர்சனத்தை சந்தித்துள்ளார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் உள்நாட்டு தொடரில் ஆடிய வாசிம் ஜாபர், இறுதியாக கடந்த 2020-ம் ஆண்டில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றார். அதன்பின் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து சயீத் முஸ்டாக் அலி தொடருக்கான உத்தரகாண்ட் அணியின் கேப்டனாக இக்பால் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அப்போதே இதன்பின்னால் வாசிம் ஜாபர் இருப்பதாக பேசப்பட்டது என்றாலும் அது பெரிதாகவில்லை. அதன் பின் நடந்த சயீத் முஸ்டாக் அலி தொடரிலும் உத்தரகாண்ட் அணி பெரிதாக சோபிக்கவில்லை. தான் ஆடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று முதல் சுற்றோடு வெளியேறியது. அதனை தொடர்ந்து அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பின்பே அவர் மீதான சர்ச்சைகள் உருவாகத் தொடங்கியது.

அந்த சர்ச்சைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் முன் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உத்தரபிரதேச மாநிலத்தை பிரித்து கடந்த 2000-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால் பல்வேறு போட்டி அமைப்புகள் உத்தரகாண்ட்டில் செயல்பட்டு வந்ததால் கடந்த 2018-ம் ஆண்டில் தான் அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கியது. அங்கீகாரம் வழங்கி 2 ஆண்டுகளுக்கு பிறகு அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் துணைத்தலைவராக இருந்த மஹிம் வர்மா, தான் உத்தரகாண்ட் மாநில அணியை வளர்க்கப்போவதாக கூறி உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றார். அவர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றதன் பின்னால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. பிறகு அந்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தாலும் வாசிம் ஜாபரை மத ரீதியாக விமர்சித்திருப்பதன் மூலம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் மஹிம் வர்மா.

உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை வாசிம் ஜாபர் ராஜினாமா செய்த பிறகு அம்மாநில சங்கத்தின் செயலாளரான மஹிம் வர்மா, ஜாபர் அணியை மத ரீதியாக பிளவு படுத்துகிறார் என்றும், அணியில் அவர் மதத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் எனவும், குவாரன்டீன் விதிமுறைகளின் போது வெளியே இருந்து ஆட்களை அழைத்து வந்து தொழுகையில் ஈடுபடுகிறார் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த வாசிம் ஜாபர் தன்னோடு ஆடியவர்களுக்கு தன்னை பற்றி தெரியும் என்றும், இக்பால் அப்துல்லாவை மாநில கிரிக்கெட் சங்கமே அணி கேப்டனாக நியமித்தது எனவும் அதில் தன் தலையீடு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். “அப்படி என் தலையீடு இருந்திருந்தால் அணியிலிருந்த இஸ்லாமிய வீரர்களை அனைத்து போட்டியிலும் ஆடவைத்திருப்பேனே!” எனவும் தெரிவித்தார். மேலும் பயிற்சியை முடித்த பின்பே தொழுகைக்கு சென்றதாகவும், தொழுகைக்கு இஸ்லாமிய ஸ்காலர்களை டீம் மேனேஜரின் அனுமதியோடு இக்பால் அப்துல்லாதான் அழைத்து வந்தார் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கம், அணி தேர்வில் தலையிடுவதாகவும், திறமையற்ற வீரர்களை முன்னிலைப்படுத்துவதாவும் தெரிவித்தார், அதோடு அவர்கள் மீதான தவறுகளை மறைக்கவே என் மேல் பலி போடுவதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சனை இந்திய அளவில் கவனம்பெறவே பலர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராகவும், ஜாபருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். மேலும் இர்பான் பதான், முகமது கைப், அணில் கும்ப்ளே என சில கிரிக்கெட் வீரர்கள் ஜாபருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

ஊடகவியலாளர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஜாபருக்கு ஆதரவு குவிய, அவர் சார்ந்திருந்த துறையில் இருந்து ஏனோ அவருக்கு பெருத்த ஆதரவு கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். விவசாயிகள் பிரச்சனையில் அமெரிக்க பாடகி ரிஹானா கருத்து தெரிவித்த போது அதனை கண்டித்த பலர், தற்போது சக வீரரான ஜாபருக்கு ஆதரவாக குரல் கொடுக்காமலிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் தற்போதைய இந்திய அணியில் ஆடும் ரோகித் சர்மா, ரகானே ஆகிய மும்பை வீரர்கள் ஜாபரின் கீழ் கிரிக்கெட் ஆடியவர்கள் தான். அதோடு சச்சின், கங்குலி போன்ற மூத்த வீரர்களும் ஜாபருடன் ஒன்றாக ஆடியவர்கள் தான். ஆனாலும் ஜாபர் இக்கட்டான நிலையில் இருக்கும் போது அவருக்கு ஆதரவான பேசக்கூட அவர்கள் விரும்பவில்லை என்னும் போது வருத்தமே வருகிறது.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button