சீனாவில் உணவு டெலிவரி செய்யும் 2 வயது சிறுமி..

சீனாவில் டெலிவரி பாய் ஒருவர், தனது மகளுடன் வீடு வீடாக சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவை சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் தனது 2வயது மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இதில் டெலிவரி பாய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்குள்ள கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு குழந்தை பிறந்து 6 மாதங்களே ஆனபோது குடும்ப சூழல் காரணமாக இருவருமே வேலைக்கு போக நேர்ந்தது. இதனால் இதுகுறித்து ஆலோசித்த இருவரும் மகள் லீ ஃபெர்ரீஸை காலை நேரம் தந்தை உடன் அழைத்து செல்லவேண்டும், பின்னர் வீடு திரும்பியதும் மாலையில் தாயுடன் மகள் நேரத்தை செலவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதையே இருவரும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது 2 வயதாகும் சிறுமி, தந்தை செல்லும் இடமெல்லாம் தந்தைக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார். அவர் சொல்வது போல், இருசக்கர வாகனத்தை தந்தை ஓட்டி செல்லும் போது, தந்தைக்கு அருகில் ஒரு பெட்டியில் இருந்து கொள்கிறார். பின்னர் தந்தையுடன் சேர்ந்து உணவை டெலிவரி செய்துவிட்டு மீண்டும் அதே பெட்டிக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.

டெலிவரி பாய் மற்றும் அவரது மகளின் செயல்களை கவனித்து படம்பிடித்த சீனா ஊடகம் ஒன்று தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், தன் குழந்தையுடன் சேர்ந்து வேலை செய்வது தனக்கு மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ள டெலிவரி பாய், தனக்கு ஒரு சிறந்த துணையாக மகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.