ஈஸ்டர் தாக்குதல்: இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை அரசு

கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்த இலங்கை அரசு, இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, மக்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தேவாலயங்கள் மற்றும் இரு நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்து 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உலக முழுவதிலுமிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றிருந்தது.
இந்தநிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 211 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 9 பேர், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்டதாக உள்ளூர் மதகுரு நௌபர் மௌல்வி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அஜ்புல் அக்பர் ஆகியோரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவனின் மனைவியான சாரா ஜாஸ்மீன் உயிருடன் இருந்தால், அவரை இன்டர்போல் மற்றும் இந்தியா உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.