"விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும்" ஜெயக்குமார் கணிப்பு! 

"விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும்" ஜெயக்குமார் கணிப்பு! 

விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரப்போகிறது. அந்த செய்தி தான் தமிழக மக்களுக்கு தீபாவளி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மாநில அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்காதது, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறியது உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் ரத்து செய்து மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினார். 

தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு ஏன் முதலமைச்சர் இவ்வளவு பதற்றமடைய வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், செந்தில்பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் பாதிபேர் சிறைக்கு செல்வது உறுதி எனவும் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, ஆளுநர் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவித்த அவர், விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரவுள்ளது என்றும் அந்த செய்திதான் தமிழக மக்களுக்கு தீபாவளி எனவும் தெரிவித்தார்.  ஏற்கனவே ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் எனவும் கூறினார். 

அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், செந்தில்பாலாஜி ஒரு கைதி என்றும் பாராமல், தயவு செய்து எதுவும் சொல்லிவிடாதே என கண்ணீர் வடிக்காத குறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கெஞ்சியதாக பேசினார். 

பின்னர், ஆர்பாட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஊழல் கட்சி என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன கருத்தை வரவேற்பதாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் இடத்தில் நாங்கள் தான் இருப்போம் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com