"மதுரை -தூத்துக்குடி தொழிற்பாதை அமைவதற்கு முக்கிய காரணம் கருமுத்து கண்ணன்" தங்கம் தென்னரசு புகழாரம்!

"மதுரை -தூத்துக்குடி தொழிற்பாதை அமைவதற்கு முக்கிய காரணம் கருமுத்து கண்ணன்" தங்கம் தென்னரசு புகழாரம்!

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தொழில் பாதை அமைவதற்கு முக்கிய காரணம் கருமுத்து கண்ணன் என அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம் சூட்டியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்காரும், தியாகராஜர் கல்வி குழுமத்தின் தலைவருமான கருமுத்து கண்ணன் கடந்த மே 23 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழியக்கம் சார்பாக அவருக்கு நினைவேந்தல் நிகழ்வானது, மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள (தனியார்) தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், " மதுரை - தூத்துக்குடி சாலையில் தொழில் பாதை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கருமுத்து கண்ணன். வருங்காலத்தில் அந்த தொழில் பாதையில் எத்தனை தொழிற்சாலைகள் வந்தாலும் அது அவரையே சாரும். 18 வருடமும் மீனாட்சி அம்மனிடம் செங்கோல் பெற்ற ஒரே ஒரு நபர் கருமுத்து கண்ணன் மட்டும் தான். இன்றைக்கும் அவரை பற்றி பேசுகிறோம், நாளைக்கும் அவரை பற்றி பேசுவோம்" என்றார்.

பழ.நெடுமாறன் பேசுகையில், கருமுத்து கண்ணன் செய்த தொண்டை யாராலும் மறக்க முடியாது, தியாகராஜர் கலைக்கல்லூரி, தியாகராஜன் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைத்து தியாகராஜர் பல்கலைக்கழகத்தை நிறுவிட ஒன்றிய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்," தமிழக வரலாற்றில் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் என யாரும் இந்தி திணிப்பை பற்றி பேசியது கிடையாது. எங்கு சென்றாலும் இந்தி திணிப்பை பற்றி  கருமுத்து தியாகராஜன் பேசுவார். அதே உணர்வோடு தமிழ் மீது பற்று கொண்டவர் கருமுத்து கண்ணன். எனவே அவரது பெயரில் தியாகராஜர் பல்கலைக்கழகம் அமைய வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com