அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு 2024ல் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதே கட்சியில், அதிபர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே உட்பட பலரும் களமிறங்கியுள்ளனர். இதில், பத்திரிகைகள் மற்றும் இணையத்தில் அதிகம் பேசப்படும் நபராக விவேக் ராமசாமி உள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி (38), அமெரிக்காவின் தவிர்க்கமுடியாத தொழிலதிபர்களுள் ஒருவர். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள். சிறந்த பள்ளியான ஹார்வர்ட் மற்றும் கல்லூரியான யேல் பல்கலைக்கழகத்தில் படிப்பினை முடித்துள்ளார்.
தொழிலதிபரான விவேக் ராமசாமி, தான் நிர்வகித்த பொறுப்புகளை விடுத்து, அதிபர் தேர்தலுக்காக களமிறங்கி, அதற்கான பணிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு எலான் மாஸ்க், தனது ட்விட்டர் கணக்கில், விவேக் ராமசாமி மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே குடியரசுக் கட்சி வேட்பாளருக்காக போட்டியிடுபவர்களுக்கான விவாத நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. சக போட்டியாளர்களின் கேள்விகளையும், தாக்குதல்களையும் மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு பதிலளித்து, தனது திறமையை நிரூபித்திருந்தார். ஊடாகங்களில் அதிகளவில் காட்டப்பட்ட விவேக், தற்பொழுது கூகுளிலும் அதிகமாக தேடப்பட்ட நபராக திகழ்கிறார்.
கடந்த வருடம் இந்திய வம்சாவளியான ரிஷி ஷுனக், UK வின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்கள் பலரும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர், மற்ற நாடுகளில் அரசியல் பிரபலங்களாகவும் பொறுப்பேற்று, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர். அந்த வரிசையில், விவேக் அடுத்த இடத்தை பிடிப்பாரா என இந்திய மக்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.