சென்னையில் சாலையில் மாடு ஒன்று பெண்ணை முட்டி தூக்கி வீசிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சாதுவாக சுற்றிய மாடு வெறி பிடித்து திரிந்ததற்கு காரணம் என்ன?
சென்னையில் சாலையில் மாடு ஒன்று பெண்ணை முட்டி தூக்கி வீசிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்குவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதியன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அருகே முதியவர் ஒருவர் மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் மாடு தாக்கி காயமடைந்த முதியவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதை தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டபோதும், உரிமையாளர்கள் பலர் அரசின் சட்டதிட்டங்களை பின்பற்றாமல் விட்டு விடுகின்றனர். இதன் விளைவாக சென்னை மாநகர மக்களை மிரள வைக்கும் வகையில் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் கிராமத்துத் தெருவைச் சேர்ந்த மதுமதி என்பவர், ஜூன் 17-ம் தேதியன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எருமை மாடு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பிய மதுமதியின் முன்பு திடீரென வந்து நின்ற எருமை மாடு ஒரே அடியாய் முட்டித் தூக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதுமதி, மாட்டு கொம்பில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தார்.

ஆனாலும் ஆவேசம் குறையாத எருமை மாடு, பெண்ணை தன் கொம்பில் வைத்தவாறே தரதரவென சில தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் எருமை மாட்டைத் துரத்திச் சென்று, அதனிடம் இருந்து மதுமதியை பத்திரமாக மீட்டனர்.

மேலும் மதுமதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எருமை மாடு தாக்குதலில் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு காயமடைந்த மதுமதி அங்கிருந்து ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. கடந்த வருடம் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முதியவர் மாடு முட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, 6 பேர் தாக்குதலுக்குள்ளாயினர்.

இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர் கிஷோர் என்பவர் மீது ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாட்டை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அரும்பாக்கத்தில் தாயுடன் நடந்து சென்ற சிறுமியை சாலையில் திரிந்த மாடு முட்டித் தூக்கியது.

மேலும் ஆவடியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று முட்டித் தூக்கியது. பின்னர் திருவல்லிக்கேணி டி.பி.தெருவைச் சேர்ந்த கஸ்தூரி ரங்கன் என்பவரை மாடு முட்டி சில தூரம் இழுத்துச் சென்றது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறினர்.

DD2

சில நாட்களுக்கு முன்பு வரை, நாய்கள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவத்தால் மக்கள் வெளியில் வருவதற்கே அச்சமடைந்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com