திருப்பூர் மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் 25 வயதான புவனேஸ்வரன். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த இவர் ஜூன் 3-ம் தேதி அதிகாலை 10 பேர் கொண்ட மர்மகும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர்கள் நல்லசிவம், மணிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருப்பூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் அவரை கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
சுந்தர்ராஜனின் 14 வயது மகளுக்கு புவனேஸ்வரன் காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் புவனேஸ்வரனின் வலையில் சிறுமி விழுந்ததைத் தொடர்ந்து, காதலியின் அந்தரங்க புகைப்படங்களை கேட்டார்.
அதன்படி சிறுமியின் புகைப்படங்களை பார்த்து ரசித்தவர், அதனை நண்பர்களிடம் அனுப்பினார். மேலும் சிறுமியிடம் புகைப்படத்தைக் காட்டிய புவனேஸ்வரன், பணம் கேட்டு தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி, தந்தையிடம் தெரியப்படுத்த, சுந்தர்ராஜன், புவனேஸ்வரன் மீது அவிநாசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் புவனேஸ்வரன், சிறுமியை விடுவதாக இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜன், புவனேஸ்வரனை கொலை செய்வதற்கு கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்தார். இதற்காக கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நண்பர் அழைப்பை ஏற்று புவனேஸ்வரன், திருமுருகன்பூண்டி பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த கூலிப்படையினர் 10 பேர் சேர்ந்து புவனேஸ்வரனை ஓட ஓட வெட்டிச் சாய்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த 10 பேரை பிடிப்பதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.