ஜாமினில் வெளியே வந்த ரவுடி வெட்டிக் கொலை... தமிழ்நாட்டில் பழிக்குப்பழி என்ற போக்கு அதிகரித்துப் போவது ஏன்?

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி, மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பழிக்குப்பழி என்ற போக்கு அதிகரித்துப் போவது ஏன்? காரணம் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஜாமினில் வெளியே வந்த ரவுடி வெட்டிக் கொலை... தமிழ்நாட்டில் பழிக்குப்பழி என்ற போக்கு அதிகரித்துப் போவது ஏன்?
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி - மொட்டணம்பட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை கலக்கிய சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் வினோத். இந்நிலையில் சமீபத்தில் ஜாமினில் வெளி வந்தவர், திண்டுக்கல் சென்றால் உயிருக்கு ஆபத்து என கருதி, திருப்பூரில் வசித்து வந்தார்.

இதனிடையே மனைவி, பிள்ளைகளை பார்த்து, அவர்களை திருப்பூருக்கே அழைத்துச் செல்வதற்கு வினோத் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஜூலை 7-ம் தேதியன்று வீட்டுக்கு சென்று தாய், அக்கா, மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க சென்றார்.

நீண்ட நாட்கள் கழித்து வந்த வினோத்துக்கு, அவரது தாய் வாய்க்கு ருசியாய் சாப்பாடு தயார் செய்து பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 7 மணியளவில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், கையில் உள்ள அரிவாளை எடுத்து வினோத்தை சரமாரியாக வெட்டினர்.

கண்மூடித் தனமாக வெட்டியதில் உடல் பாகங்கள் செதில் செதிலாகி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனை நேரில் பார்த்த வினோத்தின் தாய், சகோதரி, மனைவி ஆகியோர் அலறித் துடித்தனர்.

வினோத் உயிரிழந்ததை உறுதிபடுத்திய அந்த கும்பல் வினோத்தின் தாயை எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய போலீசார் நேரில் சென்றனர்.

உயிரிழந்த வினோத்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணையைத் தொடங்கினர். இதில் சுள்ளான் ரமேஷின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக வினோத் போட்டுத் தள்ளப்பட்டது தெரியவந்தது.

2020-ம் ஆண்டு சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் டைசன் வினோ, ஜாண்சன் வினோ, செல்வராஜ், மாயக்கண்ணன், அழகர் ஆகியோருடன் வினோத்தும் கைது செய்யப்பட்டார். இவர்களில் செல்வராஜ் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சுள்ளானின் கூட்டாளிகள், அவரது எதிரிகள் ஒவ்வொருவரையும் குறி வைத்து கொலை செய்வதும், இதற்கு எதிர் தரப்பும் அரிவாளை எடுப்பதும் என பழிக்குப்பழி என்ற போக்கு அதிகரித்துச் செல்கிறது. ரவுடிகளுக்கு இடையே உள்ள மோதலால் திண்டுக்கல் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com