கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்த நிலையில், முக்கிய குற்றவாளி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்

சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் எங்கிருந்து வாங்கப்பட்டது?
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்த நிலையில், முக்கிய குற்றவாளி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை மேலும் மோசமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேஷ சமுத்திரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சிகிச்சையில் இருந்து தப்பியோடினார். அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போது, தப்பியோடிய சுப்பிரமணி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே கள்ளச்சாராய விவகாரத்தில் முதற்கட்டமாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

DD2

இதையடுத்து முக்கிய குற்றவாளியான மெத்தனால் விற்பனையாளர் சின்னத்துரை என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மூலமாக மெத்தனால் சப்ளை செய்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாதேஷிடம் நடத்திய போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கள்ளச்சாராய வியாபாரி சின்னதுரை, மாதேஷிடம் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனாலை வாங்கியிருந்தார். தின்னர் என்ற பெயரில் போலி பில் மூலமாக மெத்தனால் வாங்கியவர் அதனை வித்தியாசமான முறையில் சாராயத்துக்கு பயன்படுத்தியுள்ளார்.

அதாவது ஒரு லிட்டர் மெத்தனாலுக்கு ஒரு லிட்டர் தண்ணீரைக் கலந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சினாலும், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊறல் போட்டு காய்ச்சி, அதன் நொதித்தல் நீரை சாராயமாக கொடுப்பதுண்டு.

ஆனால் சாராய ஊறல் எதுவுமே போடாமல் வெறும் மெத்தனாலில் தண்ணீரை கலந்து விற்பனை செய்ததே இந்த பேரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனை வழங்கும் போது, யாராவது குடிமகன்கள் வீரியம் குறைவாக இருப்பாக கூறினால் அடுத்த முறை தண்ணீரின் அளவை அரை லிட்டர் குறைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மெத்தனால் கலந்து இதனை குடித்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் சாராய வியாபாரிகள் வசமாக சிக்கினர்.

தொழிற்சாலையில் இருந்து சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மெத்தனாலை, காரில் மாற்றி வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் கோவிந்தராஜ் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இந்த விவகாரத்தில் மாதேஷ், சின்னதுரையிடம் இருந்து ஆன்லைன் மூலமாக பணம்பெற்ற ஆதாரங்கள் மற்றும் பணம் பெறுவது போன்ற புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை விற்பனை செய்தது தொடர்பாக சின்னதுரை, ஜோசப் ராஜா ராமர் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த அனைவரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மெத்தனாலில் தண்ணீர் கலக்கப்பட்டு விற்பனை செய்ததாக வெளியான இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com