திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தனது வீடு இடிக்கப்படுவதை பார்த்து பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக கூறி அதிகாரிகள் சென்று ராஜ்குமாரின் வீட்டை இடிக்க முயன்றனர். ஆனால் தீக்குளித்த ராஜ்குமார் வெளியே ஓடி வந்து விழுந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் தீக்குளித்த ராஜ்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் தீக்குளித்தது தொடர்பாக வாக்குமூலம் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதிகாரிகள் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது, கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆயிஷா என்பவருக்கு சொந்தமான இடத்தை கல்யாணி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக குறிப்பிடப்பட்டது.
கடந்த 2023 டிசம்பர் மாதத்திலேயே ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பலமுறை அறிவிக்கப்பட்டும், கல்யாணி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் வெளியேறாமல் இருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை மற்றும் மழை காரணமாக நடவடிக்கையை ஒத்தி வைத்த அதிகாரிகள், ஜூலை 4-ம் தேதியன்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்ட ராஜ்குமார், பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததாக கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், கவனக்குறைவாக செயல்பட்ட வட்டாட்சியர் ப்ரீத்தி உள்பட 3 பேரை பணியிட மாற்றம் செய்ததுடன், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.