என்னடா தொண்டை கவ்வுது? வடிவேலு பட பாணியில் சம்பவம்

மனைவியை விட்டுப் பிரிந்த இளைஞர், மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்க்க முயற்சித்தார். ஆனால் அவரது நண்பரின் வருகையால் திடீர் திருப்பம்..
என்னடா தொண்டை கவ்வுது? வடிவேலு பட பாணியில் சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம் பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஜோதிபாசு. இவருக்கு ஷகிலா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. ஷகிலா கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வர, சில நாட்களுககு முன்பு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இதைடுத்து மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த ஜோதிபாசு, சில நாட்களாகவே கடும் மனஉளைச்சலுடன் இருந்தார். இந்நிலையில் ஜூலை 9-ம் தேதியன்று காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள நல்லாத்தூரில் உள்ள மதுபானக்கடையில் மது வாங்கி வந்தார்.

பின்னர் வீட்டின் அருகே அமர்ந்து மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஜோதிபாசுவின் நெருங்கிய நண்பரான ஜெரால்டு என்பவர், திடீரென வந்தார்.

தனியே அமர்ந்து மது அருந்தியவரைப் பார்த்து, என்னை விட்டு தனியாக குடிக்கிறாயா? என ஆர்வத்துடன் கேட்டவர், உடனே மதுவை வாங்கி குடிக்க சென்றார். அதற்கு ஜோதிபாசு, இதில் விஷம் கலந்திருப்பதாய் எச்சரித்தார். இதைக் கேட்ட ஜெரால்டு, என்ன வடிவேலு காமெடியா? நானும் சூனா பாணாதான்.. எங்களுக்கே விஷமா? என கேட்டவர், மதுவை மடக் மடக் என குடித்தார்.

இதையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே ஜோதிபாசு மற்றும் ஜெரால்டுக்கு தொண்டைக் கவ்வியது. உடனே சந்தேகமடைந்த ஜெரால்டு நண்பரிடம் கேட்டதற்கு ஜோதிபாசு, மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து டப்பாவை எடுத்துக் காட்டினார்.

ஜெரால்டுக்கு ஏற்பட்ட நிலைமையை நேரில் பார்த்த ஜோதிபாசு, உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி விட்டு அவரும் மயங்கி விழுந்தார். இந்த இருவரும் அக்கம் பக்கத்தினரின் உதவியால் மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெரால்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடிவேலு படக் காட்சியை தனது நண்பர் நேர்த்தியாக நடித்துக் காட்டுவதாக நம்பி விஷம் கலக்கப்பட்ட மதுவை குடித்தவர் துடிதுடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com