புதிய நாடாளுமன்றம்: மல்யுத்த வீரர்களுக்கு நடந்த அநீதிக்கு தலைவர்கள் கண்டனம்...!

புதிய நாடாளுமன்றம்:  மல்யுத்த வீரர்களுக்கு நடந்த அநீதிக்கு தலைவர்கள் கண்டனம்...!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், உத்தரப்பிரதேச எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன.  இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனை தொடர்ந்து, பாலியல் தொடர்பாக விசாரிக்க கடந்த ஜனவரி 23 ஆம் தேதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டார்.  இந்நிலையில் குழு அமைத்தும் பிர்ஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவரது இந்த செயலைக்  கண்டித்து கடந்த ஜனவரி 18 அன்று ஜந்தர் மந்தரில்  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாவுடன் போராட்டம் தொடங்கியது. 28 வயதான வினேஷ் போகா கூறுகையில், தான் ஒருபோதும் இதுபோன்ற சுரண்டலை எதிர்கொண்டதில்லை என்றும், ஆனால் ஜந்தர் மந்தரில் அவர்கள் தொடங்கிய 'தர்ணா'வில்  பாதிக்கப்பட்ட பெண் இருந்தார் எனவும் கூறினார்.  மேலும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ், பஜ்ரங் புனியாவுடன் சேர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை  முன்வைத்தார்.  ஆனால், இந்த குற்றச்சாட்டை விளையாட்டு நிர்வாகியும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். 

பின்னர் அரசு சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள்  போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், அதற்கு பிறகும் அரசு சார்பில்  எந்த வித பதிலும் இல்லாத நிலையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. மேலும்,  பல மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் சாலையில் இறங்கிப் போராட்டம் மேற்கொண்டனர். அவரது இந்த செயலைக்  கண்டித்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்  கோரியும் கோஷங்கள் எழுப்பி கோரிக்கை வைத்தனர்.  சுமார் பத்து  நாட்களாக  இந்த போராட்டம் தொடரும் நிலையில், இன்னும் அவர் மீது  வழக்கு பதியப்படவில்லை.  இதுஒருபுறமிருக்க, எம்.பி பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகார்கள் தீவிரமானவை என்றும், அவை நிச்சயம்  நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும்  உச்சநீதிமன்றம் கூறியும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல்  இந்த போராட்டம் தொடர்கிறது. 

இந்நிலையில்,  இதுவரை இத்தனை நாட்கள்  தொடந்து போராடியும் இன்னும் தங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை என்பதால்,  இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நாடாளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு,  மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சென்றனர். அப்போது, காவல்துறையினர் அவர்களை அனுமதிக்காமல் கைது செய்தனர். இந்த செயல் கண்டிக்கத்தக்கது என  பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது  - மு. க ஸ்டாலின் 

 அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தனது டிவிட்டர்  பக்கத்தில், 


 " பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? " 

இவ்வாறு தனது கண்டணத்தைத் தெரிவித்துள்ளார். 

" வீராங்கணைகளின் குரலை மிதிக்கிறது பாஜக " - பிரியங்கா  காந்தி :

அதோடு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா  காந்தியும்  தனது ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

" வீராங்கணைகளின் குரலை ஆணவம் மிகுந்த பாஜக அரசு இரக்கமின்றி மிதித்து வருவதாகவும், கோரமான இந்த அநீதியை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

" வெட்கக் கேடானது " - மம்தா பேனர்ஜி  : 

அதனைத்தொடர்ந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,  " வினேஷ் பொகாட், சாக்ஷி மாலிக் ஆகிய சாம்பியன்கள் கைது செய்யப்பட்ட விதம் வெட்கக் கேடானது என ட்வீட் செய்துள்ளார். எதேச்சதிகார பாஜக அரசு, இரக்கமின்றி கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

" ஆணவ மன்னனாக பொறுப்பேற்றபின்.."  - ராகுல்காந்தி  : 

மேலும், " மல்யுத்த வீராங்கணைகள் கைது செய்யப்பட்டதை விமர்சித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் மூத்த  தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி 5 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கணைகள் இன்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை இணைத்து டிவிட் செய்துள்ள ராகுல்,  முடிசூட்டு விழா முடிந்து ஆணவ மன்னனாக பொறுப்பேற்றபின், தெருவில் பொதுமக்களின் குரலை நசுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com