கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் டெல்லி...விரைவில் நிவாரணம் வழங்கும் பணி! - கெஜ்ரிவால்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் டெல்லி...விரைவில் நிவாரணம் வழங்கும் பணி! - கெஜ்ரிவால்

கனமழையால் தலைநகரே வெள்ளக்காடான நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், டெல்லியிலும் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா நதி கரைபுரண்டோடியதால், கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே செங்கோட்டை மூடப்பட்டபோதும், கோட்டை முழுவதும் முழங்கால் வரை தண்ணீர் சூழ்ந்தது. அதோடு யமுனா பஜார், சிவில் லைன்ஸ், லோக் நாயக் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகளும் வெளியாகின.

மழைபாதிப்புகளால் 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட எந்த பொதுப்போக்குவரத்தும் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். தொடர்ந்து சாராய் கேல் கான் ஜங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனித்தனியாக நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், தண்ணீரின் அளவு குறைந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com