மணிப்பூர் விவகாரம்: "மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" உச்ச நீதிமன்றம் அதிரடி!!

மணிப்பூர் விவகாரம்: "மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" உச்ச நீதிமன்றம் அதிரடி!!

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மே 4 ம் தேதி இம்பாலுக்கு அருகே உள்ள காங்போக்பி என்ற மாவட்டத்தில் குகி பழங்குடியினப் பெண்கள் இருவரை சிலர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வீடியோ, இணையத்தில் வைரலானது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து முக்கியக் குற்றவாளி ஹேராதாஸ் (32) என்ற நபரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூர் சம்பவத்தை அறிந்து இதயம் நொறுங்கியதாகவும், ஒரு நாகரீக சமூகத்திற்கு வெட்கக்கேடு ஏற்படுத்தும் வகையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் எந்த மூலையிலும் இந்த சம்பவம் நடைபெறுவது கேவலமான ஒன்று எனக்கூறிய அவர், குற்றவாளிகள் ஒருவரும் தப்பிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதலமைச்சர் பிரென்சிங்கும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவத்தை பார்த்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம் என கூறியுள்ளார் உச்சநீதி மன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். மேலும், இது மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம், நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், நாங்கள் நடவடிக்கை எடுப்போம், எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com