இலங்கையின் பிரதமர் ஆகிறாரா கோத்தபய ராஜபக்ச?

இலங்கையின் பிரதமர் ஆகிறாரா கோத்தபய ராஜபக்ச?

இலங்கை அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் மற்றும் சர்வதேச நிதி உதவியின் வழியாகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசால் வீழ்த்த முடிந்தது. இலங்கையை முழுவதுமாக அடகு வைத்து தான் சர்வதேச உதவியைப் பெற்றது அரசாங்கம்.

வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

இதனால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையத் தொடங்கி அந்த நாடே திவாலானது. பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்களின் தொடர் போராட்டங்களால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். வெளிநாட்டிற்கு சென்று தான் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் அவர் அறையில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று தாய்லாந்து காவல்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

 தாய்லாந்தில் கோத்தபய ராஜபக்ச

அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பது சிறைவாசம் இருப்பதாக உள்ளது என்று கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் கூறியிருக்கிறார். இதற்கிடையே அவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே திரும்பிய பிறகு அவரை பிரதமராக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ஆகிறாரா?

கோத்தபய ராஜபக்சேவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, கோத்தபய ராஜபக்சேவை தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குள் அழைத்து வருவதற்கும், பிரதமர் பதவி அல்லது வேறு ஒரு பதவியை வழங்கவும் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் இதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் இணங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று உதயங்க தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி ஆதரவுடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேயிடம் கோத்தபயவை பிரதமராக்க சிறீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியினர் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com