5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது...!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டது. 

5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது...!

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் உயிரி தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), டைடல் பூங்காவுடன் இணைந்து, டைசல் உயிரி தொழில் நுட்ப பூங்கா (TICEL Bio Park) அமைத்துள்ளது. இந்த பூங்காவில் தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் உயிரி தொழில் நுட்பத்துறையும் இணைந்து உயிரி தொழில் நுட்ப முதன்மை கருவியாக்க மையத்தை அமைத்துள்ளது.  

உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திக்கொள்ளவும், அதன் வாயிலாக உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களில் மாணவர்கள் வேலை  பெற வாய்ப்புகளை அதிகரிக்கவும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்காக சென்னையிலுள்ள கிரசண்ட் இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் கவுன்சில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை இன்குபேசன் மையம், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா R&D இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி மற்றும் வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், அசோசியேசன் ஃபார் பயோ இன்ஸ்பையர்ட் லீடர்ஸ் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப வணிக இன்குபேசன் மையம், சாஸ்தரா TBI மற்றும் விஐடி - டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்களுடன் டைசல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-IIல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் தொழிற் பூங்காவில், முதல் நில ஒதுக்கீடு ஆணையினை, ஜெனியுன் பயோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Genuine Bio Systems Pvt. Ltd.,) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மு. தனசேகரன் அவர்களிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஏற்றுமதி வணிக வசதிகள் மையத்தையும், திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமத்தில் சிப்காட் நிறுவனத்தால் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் தங்கும் விடுதி கட்டிடத்தையும், சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் நிலையத்தையும், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தையும் என மொத்தம் 48 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.