அரியலூரில் எழுச்சி நடைப்பயணம்...ஏன் தெரியுமா?அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

அரியலூரில் எழுச்சி நடைப்பயணம்...ஏன் தெரியுமா?அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிற அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில மாதங்களாகவே ஒவ்வொரு மாவட்டங்களாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ், அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இரண்டு நாட்கள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையான வளத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டிய அரியலூர் மாவட்டம், அவற்றில் கடைநிலை மாவட்டங்களில் ஒன்றாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பாசனக் கட்டமைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவை பராமரிக்கப்படாதது தான் இதற்கு காரணம் என்று அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய ஏரிகளை கொண்ட அரியலூர்:

தமிழ்நாட்டில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஏரிகளின் எண்ணிக்கை 100 மட்டுமே உள்ள நிலையில், அதிலும் கண்டராதித்தம் ஏரி, கரைவெட்டி - வெட்டக்குடி ஏரி, சுக்கிரன் ஏரி ஆகிய மூன்று ஏரிகளும் அரியலூர் மாவட்டத்தில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி, கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ” சோழகங்கம்” எனப்படும் ஏரியும், கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், மருதையாறும்  அங்கு தான் உள்ளது. இப்படி தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. ஆனாலும், அரியலூர் மாவட்டம் இன்னும் வறண்ட பூமியாகத் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வறண்ட மாவட்டமாக நீடிக்கும் அரியலூர்:

அதேபோன்று, தமிழகத்தில் பாசன வசதி பெற்ற நிலங்களின் சராசரியான 57 விழுக்காட்டை விடவும் அரியலூர் மாவட்டத்தில் பாசன வசதி பெற்ற நிலங்களின் விழுக்காடு மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவான 937 மி.மீட்டரை விட அதிகமாக மழை பொழிவது அரியலூர் மாவட்டத்தில் தான். அப்படி இருந்தும் அந்த மாவட்டம் வறண்ட மாவட்டமாக நீடிப்பதற்கு அம்மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் பயனற்றுப்போய் கிடப்பது தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டம்:

கி.பி.9 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 11 ஆம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழர் மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவை அனைத்தும் முறையாக பராமரிக்கவும் இல்லை; தூர்வாரப்படவும் இல்லை என்பதால் தான், மிகவும் வலிமையான பாசனக் கட்டமைப்புகளை கொண்டுள்ள போதிலும் அரியலூர் வறட்சி மாவட்டமாகவே நீடிக்கிறது. இதை இனிமேலும் நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல், அனைத்து ஏரிகளையும் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு தூர் வாருதல், கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதன் மூலம் அரியலூர் மாவட்டம் இழந்த வளத்தையும், செழிப்பையும் விரைவாக மீண்டும் வென்றெடுக்க முடியும்.

அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்கு கனவுத்திட்டம்:

அப்படி செய்வதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும். மாவட்டத்தின் பல பகுதிகள் இயற்கை சுற்றுலா மையங்களாக மாறும். அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் வேலை இல்லை என்று கூறி வெளியூருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வளமாக வாழ முடியும். அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத்திட்டம் இருக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ‘ஹிஜாப்’ வழக்கும்... கடந்து வந்த பாதையும்...

எழுச்சி நடைப்பயணம்:

இந்நிலையில்,  அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அரியலூர் மாவட்டத்தை வளப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் எனது தலைமையில் நடைபெறும் இந்த நடைபயணத்தில் அரசியலைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்கும்படியும் தனது அறிக்கையில்  பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இதேபோன்று காவிரி உபரி நீரில் 3 டிஎம்சி தண்ணீரை நீரேற்று நிலையத்தின் மூலமாக எடுத்துச்சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் அணைகளில் நிரப்ப வேண்டும் என்றும், தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி தர்மபுரியில் பிரச்சார பயணம் மேற்கொண்டார். இந்த பின்னணியில் அடுத்ததாக,  சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.