அவ்வை நடராஜன் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

அவ்வை நடராஜனின் மறைவு, தமிழுக்கு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவ்வை நடராஜன் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

நீரிழிவு நோயால் அவதி

தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன், 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தினால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவ்வை நடராஜன், சிகிச்சை பலனின்றி காலமானார்.

உடல்நல குறைவால் காலமான அவ்வை நடராஜனிற்கு முதலமைச்சர், ஆளுநர் என அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

அவ்வை நடராஜனின் இறந்ததையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணவர்களையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள அவ்வை நடராஜனின் மறைவு, தமிழுக்கு பேரிழப்பு. தமது தமிழ் பணிக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை அவ்வை நடராஜன் பெற்றிருக்கிறார் என முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

வைரமுத்து இரங்கல்

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அகிலம் தழுவி வீசிய தமிழ்த்தென்றல், தன் வீச்சையும் மூச்சையும் நிறுத்திவிட்டது. இனி என்னோடு தனித்தமிழில் உரையாட யார் இருக்கிறார்? பேசுதமிழ் உள்ளவரை, அவ்வை நடராஜனின் பெருமை வாழும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை இரங்கல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அவ்வை நடராஜன் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைவதாகவும், அவரின் மறைவு தமிழுக்கும், தமிழகத்திற்கும் பெரிய இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் இரங்கல்

அவ்வை நடராஜன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் அறிஞரும் , கல்வியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அவ்வை நடராஜனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com