தெருவில் சாதிபெயர்: அயராது போராடி மாற்றியமைத்த இளம்பெண்!

தெருவில் சாதிபெயர்: அயராது போராடி மாற்றியமைத்த இளம்பெண்!

அரசு ஆவணங்களில் தெருவின் பெயரில் உள்ள சாதிபெயரை இளம் பெண் ஒருவரின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாற்றியமைத்துள்ளது. 

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் அனுசுயா (29). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும்போது அதில் தன்னுடைய தெரு பெயர், இந்திரா நகர் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பெயர் தெரு மக்களால் அழைக்கப்பட்டு வந்தாலும், அரசு ஆவணங்களில் ஆதிராவிடர் தெரு என்றே இருந்துள்ளது. இதனால் அவரது ஆதார் அடையாள அட்டையில் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி பிற அடையாள அட்டைகளிலும் ஆதிதிராவிடர் தெரு குறிப்பிடப்பட்டது. தன்னை சாதிய ரீதியாக அடையாளப் படுத்ததியதால் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் கட்டுமான பொறியியல் படித்த இவர். பின்னர் சென்னை, தெலுங்கானா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் பணியாற்றி தற்போது மதுரையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தனது தெருவின் பெயரை மாற்ற வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து கையொப்பம் பெற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் மனு அளித்துள்ளார். ஆனாலும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. 

பின்னர் மீண்டும் ‘ஆதிதிராவிடர் தெரு’ என குறிப்பிடப்பட்டுள்ள பெயரை அனைத்து அரசு ஆவணங்களில் மாற்றம் செய்யக்கோரி கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் கோரிக்கை மனு அளித்த நிலையில் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முயற்சியை கைவிடாத அனுசுயா அதற்கான கூடுதல் ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கோரிக்கை எழுப்பி வந்த நிலையில் ஒரு வழியாக அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

இதன் பலனாக ‘ஆதிதிராவிடர் தெரு’ என்ற பெயர் இனி வரும் காலங்களில் ஆவணங்களில் பயன்படுத்தப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது. இனி ஆவணங்களில் ‘இந்திரா நகர்’ என அழைக்கப்பட உள்ளது. இதன் மூலம் காலம் காலமாக தங்கள் தெரு பெயரை வெளியே சொல்ல யோசித்தவர்கள் அனுசுயாவின் அயராத முயற்சியால் ‘இந்திரா நகர்’ என்று உச்சரித்து உள்ளம் மகிழ்கின்றனர். மேலும்  வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழக அரசு, தமிழகம் முழுவதும் இது போல் தெருக்களின் பெயரை பொது பெயராக மாற்றினால தெருவில் அடையாளம் படுத்தப்படாமல் வரும் சமுதாயம் அமையும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க:ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணை!