இந்திய தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸை நிராகரிக்கிறதா..?

இந்திய தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸை நிராகரிக்கிறதா..?

அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்திருந்தது. அந்த ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 

வாக்காளர்கள் தானாக முன்வர வேண்டும்:

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஆதார் எண்ணை இணைக்கும் பணியில்,  வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆணை பிறப்பித்தையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் அன்றைய தினமே, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியும் தொடங்கவுள்ளது.

ஈ.பி.எஸ் க்கு தேர்தல் ஆணையம் அழைப்பு:

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு  தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய ஓ.பி.எஸ்:

தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ் க்கு அழைப்பு விடுக்கவில்லை. இருந்தாலும் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர்செல்வம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஓ.பி.எஸ் க்கு அழைப்பு கொடுக்காதது ஏன்?:

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக சார்பில் ஈ.பி.எஸ்க்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ஓ.பி.எஸ் க்கு அழைப்பு விடுக்கவில்லை. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈ.பி. எஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி வருகிறார். ஆனால், ஓ.பி.எஸ் நான் இன்னும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான், இது குறித்த வழக்குகள் இன்னும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இன்னும் வெளியிடவில்லை. நான் இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறேன் என்று கூறி வருகிறார். இப்படியான ஒரு நிலையில் தேர்தல் ஆணையம் எப்படி ஓ.பி.எஸை விட்டு ஈ.பி.எஸ்க்கு மட்டும் அழைப்பு விடுத்தது  ஒரு வேளை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸை ஏற்றுக்கொண்டதா? என்ற  கேள்வியை எழுப்புகிறது. ஈ.பி.எஸை ஏற்றுக்கொண்டதால் தான் ஓ.பி.எஸ்க்கு அழைப்பு விடுக்கவில்லையா? என்ற கேள்வியும் எழுப்புகிறது.

தேர்தல் ஆணையத்தின் முடிவு:

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித முடிவையும் வெளியிடாமல் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைகள் ஈ.பி.எஸ்க்கு சாதகமாக நகர்வது போல் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸை நிரகரித்ததால், ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும்? ஈ.பி.எஸ் க்கு சாதகமாக இருக்குமா? அல்லது ஓ.பி.எஸ்க்கு சாதகமாக இருக்குமா? என்பதை அரசியல் வல்லுநர்கள் கவனித்து வருகின்றனர்.