நாடாளுமன்ற தேர்தல்: நான்கு மாவட்டங்களில் செக் மேட் வைக்கும் திமுக! யார் அந்த வேட்பாளர்கள்?

நாடாளுமன்ற தேர்தல்: நான்கு மாவட்டங்களில் செக் மேட் வைக்கும் திமுக! யார் அந்த வேட்பாளர்கள்?

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் செக் மேட் வைக்கும் திமுக?  வேட்பாளர்களின் விரிவான  விவரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10மாத காலமே உள்ள நிலையில் மத்தியில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தாலும், மறு புறம் தொகுதி வாரியாக தேர்தல் பணிகளை செய்ய ஏற்கனவே திமுக சார்பில் மாவட்ட முழுவதும் பார்வையாளர்களை நியமித்தது. அந்த வகையில் மதுரை மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுகிழமை திருமண மண்டபம் ஒன்றில் மதுரை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டுள்ளனர். கலைஞர் நூலகம், மற்றும் நூற்றாண்டு கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. பின் மதுரை மற்றும் சுற்றுவட்டார நாடாளுமன்ற  தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என்று அனைவராலும் கூறப்பட்டதாகவும் அதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை:

தமிழ்நாட்டிலே கோவை, மதுரை தான் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கான தொகுதியாக பார்க்கப்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் 2009ஆம் ஆண்டு மு.க.அழகிரியை தவிர்த்து திமுகவினர் வேறு யாரும் அங்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் அதிகமுறை வென்றுள்ளது. தற்போது கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சு.வெங்கடேசன் எம்.பியாக உள்ளார்.

Su Venkatesan MP (@SuVe4Madurai) / Twitter

பி.ராமமூர்த்தி, தங்கமணி, சுப்பிரமணி சாமி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இத்தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது. மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த பி.மோகன் இருமுறையும், காங்கிரஸ் மூத்த தலைவர் AG சுப்புராமன் மற்றும் அவரது மகன் AGSராம்பாபு உள்ளிட்டோர் 1977 முதல் 1998 வரை ஒட்டுமொத்தமாக 22 வருடங்கள் மதுரை எம்.பியாக இருந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை இருப்பதால் ஆளுங்கட்சி எப்போதும் முனைப்பு காட்டி வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் கூட்டணியினருக்கே மதுரை சென்றுவிடுகிறது. தற்போது மீண்டும் மதுரையை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டும் என்பதில் எந்த ஐயப்பாடில்லை, மேலும் தமிழர்கள் உரிமை உள்ளிட்ட பிரச்சனைகளை குறித்து தினமும் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பிவரும் சு.வெங்கடேசன் மாற்று கட்சியாக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குட்-புக்கில் உள்ளார். 90% மீண்டும் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் தான் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: மதுரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்...அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

சிவகங்கை: 

காங்கிரஸ் எந்த சூழலிலும் சிவகங்கையை விட்டுக்கொடுக்காது என்பது அனைவரும் அறிந்ததே, 1967 முதல் 77 வரை எம்.பியாக வலம் வந்த தா.கிருஷ்ணன் மட்டும் திமுகவை சேர்ந்தவர், அடுத்தடுத்து காங்கிரஸே அத்தொகுதியை தனக்கு சாதகமாக்கி கொண்டது. சிவகங்கை என்றாலே நினைவுக்கு வருவது ப.சிதம்பரம் எனும் அளவிற்கு ஆனது. 1984 முதல் 99 வரையிலும் 2004 முதல் 2014 வரை மொத்தம் 25 வருடங்கள் அங்க எம்.பியாக வலம் வந்தவர்.

Karti Chidambaram. Credit: PTI Photo

மேலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 2019 தேர்தலில் அதே தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறையும் அவருக்குதான் அத்தொகுதி வழங்கப்படும் என்றாலும், மாநில காங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல்  சுயேட்சையாக கருத்துகளை தெரிவித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்ற  விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளது. அதுபோக தற்போது மாநில தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி, ப.சிதமபரத்தின் ஆதரவாளர் என்பதால் அத்தொகுதியை திமுகவிடமிருந்து கட்டாயம் கேட்டு பெறும். ஒரு வேளை சிதம்பரம் குடும்பத்திற்கு செக் மேட் வைக்க திமுக நினைத்தால் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேனி: 

2009 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவானதே தேனி நாடாளுமன்ற தொகுதி. அதற்கு முன்பாக பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட சட்டமன்றங்களை உள்ளடக்கி பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி இருந்தது. முஸ்லிம் லீக் தலைவர் எஸ். எம். முகம்மது செரிப், அஜ்மல் கான், ஜே. எம். ஆரூண்ரஷீத், டிடிவி தினகரன்,  சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோர் இத்தொகுதியின் எம்.பியாக இருந்துள்ளனர். தேனி தொகுதி உருவான பிறகு மொத்தம் 3 தேர்தல்களையே சந்தித்துள்ளது அதில் காங்கிரஸ் ஒரு முறையும், அதிமுக இருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி தெருத் தெருவாக இரைக்கிறார்கள்! தங்க  தமிழ்செல்வன் பகீர் குற்றச்சாட்டு!! | nakkheeran

தற்போது அத்தொகுதி எம்.பியா ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் உள்ளார். ஒரு குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி அதிகமுள்ள தேனியில் குறிப்பிட்ட அளவில் சிறுபான்மையினர் வாக்கும் உள்ளது. கடந்த முறை அமமுகவில் சார்பில் போட்டியிட்டு  தங்க.தமிழ்செல்வன் கிட்டதட்ட ஒரு லட்சம் வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். போனமுறை தொகுதிக்கு சம்மந்தமேயில்லாத இவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்தியது காங்கிரஸ். தேனி தொகுதியின் பிரபலமான ஆருண் வயது மூப்பால் பெரிதாக அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அவரது மகனும் வேளச்சேரி எம்.எல்.ஏவாக உள்ளார். மாற்று கட்சியில் இருந்து வந்த சேலம் பார்த்திபன், செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்பில் உள்ள போது தற்போது எந்த வித பொறுப்பும் இல்லாமல் தங்க,தமிழ்செல்வன் உள்ளதால் 90% திமுகவே இத்தொகுதியில் தங்க.தமிழ்செல்வனை களமிறக்கும். 

ராமநாதபுரம்: 

இந்த தொகுதியில் தற்போது எம்.பியாக உள்ள நவாஸ்கனி கூட்டணி கட்சியான இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சார்ந்தவர். சிறுபான்மையினர் அதிகமுள்ள இத்தொகுதியில் மீண்டும் முஸ்லீம் லீக்  கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்த மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நவாஸ்கனிக்கும் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் வாக்குவாதம் வந்தது குறிப்பிடதக்கது. வேறு சிறுபான்மையினருள்ள தொகுதிகளில் ஏற்கனவே வேட்பாளர்களை தீர்மானித்துள்ள நிலையில், இத்தொகுதியே மீண்டும் வழங்கப்படலாம். அதே சமயம் நவாஸ் கனியின் தொகுதி செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை என்பதும் பெரிதாக பேசப்படுகிறது. திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தியும் தற்போது அந்த பகுதியில் விசிட் செய்வதால் ஒரு வேளை அவரும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் முஸ்லீம் லீக்கை திமுக கழற்றி விட முடியாது என்பதால் அவர்கள் கேட்கும் இடம் ராமநாதபுரமாக தான் இருக்கும். 2009 கே.கே.ரித்தீஸ் க்கு பிறகு வேறு திமுகவினர் இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் தலைவர் பி.கே.மூக்கையாதேவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றே நாடாளுமன்றம் சென்றார். 

விருதுநகர்: 

2009 ஆம் ஆண்டு சிவகாசி பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்ட விருதுநகராக மாற்றப்பட்டது. விருதுநகர் நாடாளுமன்றத்தை பொறுத்தமட்டில் விருதுநகர், சிவகாசி, அருப்புகோட்டை மற்றும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. திருப்பரங்குன்றம், திருமங்கலம் மதுரை மாவட்டத்தில் உள்ளவைகள் ஆனால் தொகுதி மறுசீரமைப்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளது. பட்டாசு, தீப்பெட்டி, காகிதம் சார்ந்த டைரி,காலாண்டர், சிமெண்ட் உள்ளிட்ட தொழில்கள் பிரதான தொழிலாக பார்க்கப்படுகிறது.

தற்போது சிட்டிங் எம்.பியாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாணிக்கம் தாகூர் உள்ளார். ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கும் அவர் தற்போது கோவா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மற்றும் நாடாளுமன்ற காங்கிரஸ் கொறாடாவகவும் உள்ளார். மொத்த இரண்டு முறை விருதுநகர் எம்.பியாக இருந்த மாணிக்கம் தாகூர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சயம் .மேலும் தொகுதியில் உள்ள அனைவரின் வீட்டு சுப துக்க நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்வது மேலும் பங்குபெற முடியாத நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் செல்வது அவருக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் மதிமுக சார்பில் துரை வைகோ விருதுநகரை கேட்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஓட்டு அரசியலில் தாக்கு பிடிப்பாரா துரை வைகோ? என்பது சந்தேகமே இதே 2009 நாடாளுமன்ற தேர்தலில் மாணிக்கம் தாகூரிடம் வைகோ தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. திமுக சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் மணிமாறன் கேட்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை மேலே காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அமைச்சரவையில் உள்ளவர் மாணிக்கம்தாகூர் என்பது குறிப்பிடதக்கது.

- மா.நிருபன் சக்கரவர்த்தி

இதையும் படிக்க: "இலவசம் என்ற வார்த்தை கூட பயன்படுத்தக்கூடாது என முதல்வர் என்னிடம் சொன்னார்" - உதயநிதி!