தமிழகம் முழுவதும் விரைவில் விசிட் அடிக்கும் ராஜ மாதா...

தமிழகம் முழுவதும் விரைவில் விசிட் அடிக்கும் ராஜ மாதா...

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தற்போது களைகட்டியுள்ளது சசிகலா பேசிய ஆடியோ.

அண்மையில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஒருவருக்கொருவர் மறைமுகமாக மோதிக்கொண்டதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இதனால் தேர்தலின் போது கடுமையாக உழைத்த கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் பாதிக்கப்பட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. 

இதனால் மன விரக்தியின் உச்சிக்கே சென்ற தொண்டர்கள் சிலர் சசிகலாவிடம் போனில் உரையாடி தங்களது மனகுமுறல்களை கொட்டிதீர்த்தனர். இதனை பொருமையாக கேட்டுக்கொண்ட அவர், தான் விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் எனவும், கட்சியை சரிசெய்துவிடலாம் எனவும் தொண்டரை சமாதானப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, சசிகலாவிடம் எந்த அதிமுக தொண்டனும் பேசவில்லை. அவர் அமமுக தொண்டர்களிடம் பேசி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றார்.

இப்படி ஒருவருக்கொருவர் பேசி வருவது குறித்து சசிகலா தரப்பினர்களிடம் விசாரித்த போது, அது என்ன எப்போது சசிகலா தொடர்பான தகவல்கள் வந்தாலும் கே.பி முனுசாமி மட்டுமே பேசுகிறார்.. மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்… 

அதிமுக முன்னால் முதல்வரான இபிஎஸ், சசிகலாவை கட்சியில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்கிறார். ஆனால், ஓபிஎஸ்சோ, சசிகலாவின் மீதான நன்மதிப்பு தங்களுக்கு குறையவில்லை என்று பேசுகிறார். ஒருவர் தேனியிலும், மற்றொருவர் சேலத்திலும் அமர்ந்து கொண்டால் எப்படி கட்சியை வழிநடத்த முடியும் என தொண்டர்கள் கொதித்து வருகின்றனர்.  

மேலும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து அதிமுக சார்பில் ஒரு கூட்டம் கூட இதுவரை கூட்டப்படவில்லை. ஏன், காணொலி காட்சிகள் மூலம் கூட கூட்டத்தை கூட்டவில்லை என கேள்வி எழுப்பும் சசிகலா தரப்பினர், ஏனென்றால் அவ்வளவு எதிர்ப்புணர்வும், மோதல் உணர்வும் கட்சிக்குள் இருக்கிறது என்றனர்.

எனவே இதனை சரிசெய்ய சசிகலா கட்சிக்குள் வந்தால்தான் அது சரியாக இருக்கும் என தொண்டர்கள் மட்டுமல்ல அதிமுக நிர்வாகிகள் சிலரும் நினைக்கின்றனர் என்பதற்கு மாற்று கருத்தில்லை. மேலும், ஜூலையில் அல்லது ஆகஸ்டு மாதத்தில் தமிழகம் தொண்டர்களை சந்திப்பதற்காக சசிகலா தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும் சசிகலா தரப்பினர் தெரிவிக்கின்றனர்…

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com