அதிமுகவை துவம்சம் செய்யும் ஸ்டாலின்...இனித் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப் போகும் திமுக..!!

அதிமுகவை துவம்சம் செய்யும் ஸ்டாலின்...இனித் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப் போகும் திமுக..!!

இனித் தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஆளும் திமுக:

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய திமுக கூட்டணி பலத்தோடு அசுர வேகத்தில் ஆட்சி செய்து வருகிறது.  திராவிட மாடல் கருத்தை முன்வைத்து பேசி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தான் இனித் தமிழ்நாட்டை நிரந்தர்மாக ஆட்சி செய்யும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.  இதற்கேற்ப இந்தி மொழி எதிர்ப்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி பாஜக எதிர்ப்பை மேற்கொண்டு வருகிறார்.  தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உட்கட்சி பிரச்சினையால் அதிமுக செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.

பகைவர்களாக மாறிய ஓபிஎஸ் - இபிஎஸ்:

ஜா- ஜெ அணிகள் பிரிந்திருந்த போது அதனை ஒருங்கிணைத்த தம்மால் அதிமுகவின் தற்போதைய பிளவையும் சரிசெய்ய முடியும் என சசிகலா கூறிவந்தார்.  அதற்கேற்ப கடந்த இரு தினங்களாக ஓபிஎஸ் - இபிஎஸ்  இடையே ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதா ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்த பின்னணியில், எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை ஒதுக்கீடு செய்வதில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வெளிப்படையான முரண்பாடு வெடித்துள்ளதை சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் எனக் கோரி, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதினா.

அதே சமயம், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் தனது கருத்தைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என ஓபிஎஸ்ஸும் ஒரு கடித்தத்தை சபாநாயகர் அப்பாவு விடம் ஒப்படைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட, எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பு தொடர்பாக ஈபிஎஸ் கடித்தத்திற்கு என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கோரி அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி சபாநாயகர் அப்பாவுவிற்கு ஒரு மனுவை அளித்தார்.

இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்த சபாநாயகர் அப்பாவு, இன்று இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கியதால், எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தொடர்வது உறுதியானது. அதே சமயத்தில், இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஈபிஎஸ் கருத்து நிராகரிக்கப்பட்டதால் ஓபிஎஸ் அணிக்கும் இபிஎஸ் அணிக்கும் இடையே முரண்பாடு முற்றிவிட்டது. ஓரணியில் பயணிப்பார்கள் என்று பார்க்கப்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் இனி இணையவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசாரணை வளையத்தில் அதிமுக நிர்வாகிகள்: 


ஒருபக்கம், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முரண்பாடு முற்ற மற்றொரு புறத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை வளையத்தில் சசிகலா, ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சசிகலாவின் உறவினர் சிவக்குமார் ஆகியோர் சிக்கியுள்ளனர். ஏற்கனவே, உட்கட்சி பிரச்னையில் சிக்கியுள்ள அதிமுக நிர்வாகிகள், தற்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை வளையத்திலும் சிக்கி இருப்பது அவர்களை மேலும் முடக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத நிலையில் இருக்கும் அதிமுக ஜெயலலிதாவின் மரண விசாரணையை மீண்டும் நடத்தப்பட்டால் அவர்கள் மேலும் முடங்கக் கூடிய நிலை ஏற்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இபிஎஸ்-க்கு தனி செக்: 


மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசாமல் தனிப்பட்ட கட்சி விஷயத்திற்காக இபிஎஸ் பேசுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு சட்டபேரவையிலேயே இபிஎஸ் மீது குற்றம்சாட்டினார். அதே சமயத்தில், இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்த இபிஎஸ் தான் அந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் இபிஎஸ்க்கு அரசியல் நெருக்கடி கொடுக்கும் நிலையில், ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையும் இபிஎஸ் ஆட்சியில் நடந்த கருப்பு பக்கத்தை திருப்பி பார்க்க வைத்துள்ளது. இது இபிஎஸ்க்கு நெருக்கடி மட்டும் அல்லாமல் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த துயரத்தை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்தி உள்ளது. 

”துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு.  அப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா, டிஜி.பி மற்றும் புலனாய்வு ஐஐஜி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அனைத்து விவரங்களையும் முதலமைச்சருக்கு நிமிடத்திற்கு ஒருமுறை தெரிவித்துள்ளனர்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார் அருணா ஜெகதீசன்.

ஒட்டு மொத்தத்தில் பார்க்கும் போது, அதிமுகவை அரசியல் ரீதியாகவும் உட்கட்சி ரீதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடக்கி வைத்துள்ளார். இதனை அவர் அரசியல் ரீதியாக செய்யாமல் கடந்த காலத்தில் அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் செய்த தவறுகளின் அடிப்படையில் செய்திருக்கிறார். ஸ்டாலின் அமைத்துள்ள இந்த அரசியல் சுழலில் இருந்து இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, சி.விஜயபாஸ்கர் எப்படி மீளப்போகிறார்கள். அதிமுகவை எப்படி கரையேற்றப் போகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. 

                                                                                                                        -நப்பசலையார்  

இதையும் படிக்க:    ”தமிழ்ப்பெருமை பேசும் மோடி இந்தியை திணிக்கிறாரா?” நயினார் நாகேந்திரன் விளக்கம்!!!