ஸ்டாலினின் டீமில் இருக்கும் யார் இந்த ஜான் த்ரே,.? தமிழகத்தில் தொழில்முதலீடுகளை இவரால் ஈர்க்க முடியுமா.?

ஸ்டாலினின் டீமில் இருக்கும் யார் இந்த ஜான் த்ரே,.? தமிழகத்தில் தொழில்முதலீடுகளை இவரால் ஈர்க்க முடியுமா.?

ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ரகுராம் ராஜன் தவிர பிற அனைவரும் பெரும்பாலும் அறியாத முகம் தான். இதில் ஜான் த்ரே என்பவர் முழுக்க முழுக்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவே நியமிக்கப்பட்டவர் என்கிறார்கள் பொருளாதாரம் அறிந்தவர்கள். 

பெல்ஜியத்தில் பிறந்த ஜான் த்ரே தற்போது இந்திய குடிமகனாவார். இவர் இலண்டன் பொருளியல் பள்ளியிலும், தில்லி பொருளியல் பள்ளியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  இந்திய அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்ற இவர்  பொருளியல் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். 

இந்தியாவுக்கு பொருளாதார தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், போட்டி சந்தைகளை உருவாக்குதல் போன்றவை நிச்சயம் தேவை என்று வாதிட்ட இவர், ஆனால் இவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே முக்கியம் என்றும் இதில் சமூகநீதி மிக முக்கியம் என்றும் கருதுபவர். சமூகநீதி என்றும் கோட்பாடு தான் இவரையும், திமுகவையும் இணைத்துள்ளது. 

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜான் த்ரே ஆகிய இருவர் இணைந்து எழுதிய புத்தகங்கள் உலக அளவில் புகழ்பெற்றது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பெரியளவில் தொழில்முதலீடுகள் ஏதும் வரவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாத சூழல் இருக்கிறது. 

இந்நிலையில் தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக ஜான் த்ரே நியமிக்கப்பட்டிருப்பது தமிழகம் மேல் தொழில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்றும், இதன் காரணமாக வரும்காலங்களில் தமிழகத்தில் தொழில்முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.