வலுப்பெரும் எடப்பாடி கூட்டணி

Published on
Updated on
2 min read

பாஜகவில் இருந்து விலகியது முதல் எடப்பாடி பழனிச்சாமியின் கரங்கள் வலுப்பெற்று வருகின்றன. 

2019 ஆம் ஆண்டு அதிமுக பாஜக பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் இதில் தேனித் தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பாஜவிற்கு எதிரான அலை வீசியது தான் காரணம் எனக் கூறப்பட்டது. ஒரு வேளை பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக நின்றிருந்தால் குறைந்தது 10 தொகுதியையாவது வென்றிருக்கலாம் எனவும் அப்போதே விமர்சிக்கப்பட்டது. 

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறாமல் போனதற்கு பாஜக உடனான கூட்டணியும் முக்கிய காரணம் என்று மீண்டும் பேச்சு அடிபட்டது. மேலும் ஒற்றை தலைமை இல்லாததும் முக்கிய காரணமாக கூறப்பட்டது. 

இந்நிலையில்  அதிமுக பொதுக்குழுவை கூட்டி முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்திற்கு சென்ற போதும் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே கிடைத்தது. ஒற்றைத் தலைமையை கைப்பற்றியதன் வழியாக அதிமுக விற்கு இருந்த முக்கிய பலவீனத்தை களைந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் தனிப்பெரும்  தலைவரானார். 

அடுத்தாக அதிமுகவின் பலவீனமாக பார்க்கப்பட்டது. பாஜகவுடனான கூட்டணி. பாஜகவின் மதவாத மற்றும் இந்தி மய கொள்கைகளுக்கு தமிழ்நாட்டில் போதிய ஆதரவு இல்லை என்பதைவிட எதிர்ப்புகள் மிக அதிகம் என்பதே யதார்த்தம். இதனால் திமுகவின் மீதான அதிருப்தி கூட அதிமுகவின் ஆதரவாக முடியவில்லை.  

மேலும் அதிமுக பாஜகவின் அடிமைக் கட்சியாக இருக்கிறது என்று கடுமையாக பலராலும் விமர்சிக்கப்பட்டது. அது அண்ணா திமுக அல்ல அமித்ஷா திமுக என வெளிப்படையாகவே ஒரு அமைச்சர் அதிமுக வை விமர்சித்தார். 

தனது மதவாத கருத்துகளுக்கு போதிய ஆதரவு கிடைக்காத பாஜக அவ்வப்போது ஊழல் குறித்து அதிக கவனம் செலுத்தி வந்தது. இதில் சற்று அதிகமாக போய்விட்ட பாஜக மாநில தலைமை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. இது ஜெயலலிதாவை இதய தெய்வமாக வணங்கும் அதிமுகவினரை அதிருப்தி அடைய செய்தது. இது போதாது என்று பாஜக மாநில தலைமை அறிஞர் அண்ணாவை பற்றி பொய்யான ஒரு தகவலை சொல்ல அது அதிமுக பாஜக இடையே நிரந்தர பிளவை உண்டாக்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து அதிமுக தனியாக கூட்டணியை அமைத்து வரும் 2024 தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக புதிய பாரதம் கட்சி தலைவரும் கேவி குப்பம் எம் எல் ஏ வுமான பூவை ஜெகன் மூர்த்தி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் இன்று பெருந்தலைர் காமராஜர் கட்சியின் தலைவர் தனபாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக வின் கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றே அரசியல் விமர்சகர்களால் கருத்து முன்வைக்கப்படுகிறது.  ஏற்கனவே என்எல்சி பிரச்சினை நீட் பிரச்சினை போன்றவற்றில் பாஜகவை எதிர்த்து வரும் பாமகவும் பாஜகவை தவிரத்து அதிமுகவுடனேயே இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகள் மட்டுமின்றி இந்தியா கூட்டணி கட்சிகளும் கூட தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனே விசிக தலைவர் திருமாவளவனின் உடல் நலத்தை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி பேசியதும் கூட கூட்டணிக் குறித்த பேச்சு தான் என சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. மேலும், தொகுதி பங்கீட்டில் உரிய சீட்டுகள் கிடைக்காவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2024 களத்தில்  எடப்பாடி பழனிச்சாமியின் கரங்கள் வலுப்பெற வாய்ப்புகள் அதிகரித்தே உள்ளன. ஆனால் அவற்றை அவர் எடப்பாடி தனக்கு சாதகமாக பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com