ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!

5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

சமீபத்தில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்கள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் மட்டும் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களின் இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதன்படி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் இரண்டு மாநிலங்களில் பாஜகவும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸூம், ஒரு மாநிலத்தில் இழுபறியும் இருந்து வருகிறது.

அந்த வகையில், 199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து  முன்னிலை வகித்து வருகிறது. 1949 முதல் 1977 வரை ராஜஸ்தான் மாநிலத்தை தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, 1977 ல் ஜனதா கட்சியிடம் தோல்வியை தழுவியது. பின்னர் 1980 மீண்டும் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், 1990ல் பாஜகவிடம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு, காங்கிரஸூம், பாஜகவும் மாறி மாறி ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்து வரும் நிலையில், கடந்த 2018ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில் அசோக் கெலாட் முதலமைச்சராக உள்ளார். 

ராஜஸ்தானில் அதிகம் ஆட்சியை பிடித்த கட்சியாக காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், இந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டியது. அதேசமயம், பாஜகவும் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிப்பதற்காக தீவிர முனைப்பு காட்டி வந்தது. அதேபோல் பிஎஸ்பியும் தீவிரம் காட்டியது. மும்முனை போட்டி நிலவிய நிலையில், தற்போது வரை 113 இடங்களை கைப்பற்றி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 69 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தையும், பிஎஸ்பி வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. 

ராஜஸ்தானில் காங்கிரஸ் முகமான முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோன்ங்க் தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவையே சந்தித்து வருகிறது. 

அதேபோல், பாஜகவின் முகமான முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, ஜல்ராபடன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெறும் பட்சத்தில், வசுந்தரா ராஜேவே முதலமைச்சர் தேர்வாகவும்  இருப்பார் என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.  இவர் கடந்த 2003 மற்றும் 2013 ஆகிய 2 தேர்தல்களிலும் வசுந்தரா ராஜேவே முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஆளும் மாநிலத்தில் காங்கிரஸ் பின்னடைவை சந்திப்பதற்கு அக்கட்சியின் உட்கட்சி பூசலே மிக முக்கிய காரணமாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com