அதிமுக பொதுக்குழு தொடர்பாக கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு நடக்கும் அதே சமயம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினரால் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இடைக்காலப் பொதுச்செயலாளர்

அதிமுக அலுவலகத்தில் பிரச்சினை நடந்து கொண்டிருந்த அதே நேரம் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பிரச்சினையைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையீடு

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. சட்டப்போராட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தயராகி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தரப்பிலும் இதேபோன்ற கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.