மே 24 ல் நடந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக எழுதிய முதலமைச்சர்...!

மே 24 ல் நடந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக எழுதிய முதலமைச்சர்...!

இன்று சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

மே 24 - புதன்கிழமை : 

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்புடன் அன்றைய நாள் தொடங்கியது. டெமாசெக் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. தில்லான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.கிம்யின் வாங், கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு.சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

மாலையில் சிங்கப்பூரின் தொழில் - வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான தமிழர் திரு.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். அவர் என் இனிய நண்பர். சென்னையின் மேயராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் நான் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரும் சென்னை வரும்போது என்னைச் சந்திப்பது  வழக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் என்னைச் சந்தித்த திரு.ஈஸ்வரன் அவர்கள் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், சிங்கப்பூருக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

சிங்கப்பூர் அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் போல தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரைச் சந்தித்து உரையாடியபோது, முன்பு சிங்கப்பூர் வந்த போது இருந்ததைவிட இப்போது அதிக பசுமையாக இருக்கிறதே, நகரக் கட்டமைப்பை எப்படி சிறப்பாகக் கையாள்கிறீர்கள், சாலையோர நடைபாதைகளை மக்கள் எப்படி இவ்வளவு சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பவை குறித்தெல்லாம் பேசிவிட்டு,  சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம்.

திரு.ஈஸ்வரன் அவர்களுடன் புறப்பட்டு, சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன். சிங்கப்பூரில் உள்ள தொழில் கூட்டமைப்பினர் அன்புடன் வரவேற்றனர். கருத்தரங்கில், தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோர் பேசியபிறகு, முதலீட்டாளர்களுடன் நான் உரையாடினேன். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள நீண்டகால உறவை எடுத்துக்கூறி, வந்தாரை வாழவைக்கும் சிங்கப்பூர், இனி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் கை கொடுக்கும் என்று நான் நம்புவதாகச் சொன்னபோது அனைவரும் கை தட்டல்களால் வரவேற்றனர். முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

தொழில் முதலீடுகள் சார்ந்த தொடர்ச்சியான சந்திப்புகளையடுத்து, மனது சற்று இளைப்பாறும் வகையில் சிங்கப்பூர்வாழ் தமிழ் நெஞ்சங்கள் கலாச்சார-பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான தமிழர் சண்முகம் அவர்களை அந்த விழாவில் சந்தித்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழை அவரிடம் சிங்கப்பூர் தமிழர்கள் நேரில் கொடுத்தபோது, தமிழ்நாட்டு முதலமைச்சரை வரவேற்க நானும் விழாவுக்கு வருகிறேன் என மனப்பூர்வமான அன்புடன் அவர் வருகை தந்திருந்தார். சிங்கப்பூர் பிரதமருக்கு அடுத்த நிலையில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கக்கூடிய தமிழரான திரு.சண்முகம், அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்.

 சிந்தனை வளமும் செயல்பாட்டுத் திறமும் கொண்ட சிங்கப்பூர் நாட்டின் திரு.சண்முகம் அவர்கள், தமிழ்நாட்டில் நடைபெறும் நமது திராவிட மாடல் ஆட்சியை எந்தளவு கவனிக்கிறார் என்பதை அவரது பேச்சில் உணர முடிந்தது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்தார். பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், காலைச் சிற்றுண்டித் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் பாராட்டினார்.

கலாச்சார-பண்பாட்டு விழாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழின் இளந்தலைமுறையினர் அரங்கேற்றிய மயிலாட்டம்-ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இருந்தன. கடல் கடந்த நாட்டில் இருந்தாலும், சிங்கப்பூர் தமிழர்களிடம் தமிழ் மண்ணின் மணம் வீசுவதையும், தமிழர் என்ற உணர்வு ஆழமாக வேரோடி இருப்பதையும் உணர்ந்தேன். மகிழ்ந்தேன். இந்தப் பண்பாட்டுத் தொடர்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., அவர்கள் தனது பேச்சில் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டினார். சிங்கைவாழ் தமிழர்களின் உணர்வையும் உழைப்பையும், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் என்னுடைய பேச்சில் எடுத்துரைத்தேன்.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் உலகளவில் இன்று உயர்ந்து நிற்கக் காரணமான அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பை மதித்துப் போற்றியதுடன், சிங்கப்பூரின் அரசு நிர்வாக மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் இடம்பெறச் செய்த மாண்பாளரான லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் பெருமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும், மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே அவரது சிலை நிறுவப்படும் என்றும், பண்பாட்டு விழாவில் அறிவித்த போது, வரவேற்பும் ஆரவாரமும் நெடுநேரம் நீடித்தன. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தாய் மண்ணில் பெருமை சேர்க்கப்படுகிறது என்ற உணர்வே சிங்கை தமிழர்களிடமிருந்து வெளிப்பட்டது.

 சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் பலர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனால்தான், மன்னார்குடியில் நினைவுச் சின்னம் என அறிவித்தேன். விழாவில் கலந்துகொண்ட நம் தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு அது கூடுதல் மகிழ்வைத் தந்திருக்கும். டெல்டாகாரன் என்பதை என்றும் மறவாத எனக்கு அவரைவிட கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.

மலேயா என்ற பெயரில் இன்றைய மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றாக இருந்த காலத்திலேயே அங்கு வாழ்ந்த நம் தமிழர்களின் நலனுக்காகப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டவர் தந்தை பெரியார். அவரது இயக்கத்தின் தளபதியாக விளங்கிய, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கோலாலம்பூர் சென்று உரையாற்றியபோது, அவரது பேச்சைக் கேட்கும் ஆவலுடன் அந்த மேடையில் அமர்ந்திருந்தவர் லீ குவான் யூ. அண்ணா அவர்களின் பேச்சாற்றலையும், தமிழர்கள் வாழ்வின் மீதான அவரது அக்கறையையும், உலகளாவிய சிந்தனைகளையும் அறிந்து அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பித்தவர் லீ குவான் யூ. பேரறிஞர் அண்ணாவைத் தனது மூத்த சகோதரன் என்று சொன்னார். லீ குவான் யூ அவர்கள் மீது நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் பெரும் மதிப்பு உண்டு என்பதை, லீ குவான் யூ மரணத்தின்போது, அவரை ‘சிங்கப்பூரின் நாயகர்’ எனப் போற்றிய கலைஞரின் இரங்கல் அறிக்கை வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூர் வருகை தந்தபோது, லீ குவான் யூ அவர்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டியதுடன், தமிழர்களின் உழைப்பையும் போற்றினார்.  என்றும் தொடரும் இந்தத் தமிழுணர்வின் அடையாளமாகத்தான் உங்களில் ஒருவனான நானும் சிங்கைவாழ் தமிழர்களிடம் உரையாற்றினேன்.

 கடிதம் தொடரும்...

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com