கொரோனா தாண்டவம்: 13% மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 13% மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.  

கொரோனா தாண்டவம்: 13% மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்!

தமிழ்நாட்டில் மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிற போதிலும் 13% மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் மன்றம் (TNSF) தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 2,137 மாணவர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 44% பெண் குழந்தைகள் ஆவர்.  அதில் 31% அட்டவணை சாதிகள் (SC), 32% பின்தங்கிய வகுப்பினர் (BC), 30% சமூகத்தின் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் (MBC) ஆவர். இதில் சுமார் 60% குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள். மேலும் அவர்களில் பாதிப் பேர் ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.

கோவிட் தொற்று நோயின் விளைவாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இன்று வரை அவை திறக்கப்படவில்லை. அதனால் தமிழ் நாட்டில் மாணவர்களின் கற்றல் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஊட்டச் சத்துக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. 11% மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நின்றுள்ளனர். 13% மாணவர்கள் வேலைக்குச் செல்வது தான் எங்கள் முன்னுள்ளே ஒரே வழி என்று கூறுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் கணக்கெடுக்கப்பட்டவர் களில் 95% குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

பள்ளிகள் மூடப்படுவதால் நீண்ட காலமாக வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தையின் பாதுகாப்பு குறித்து 45% வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட 89% மாணவர்கள் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆவர். இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் உள்ளனர். பெற்றோர்களுக்கு உதவ ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளே அதிகமாக வீட்டு வேலைகளில் அதிகம் ஈடுபடுத்தப் படுகின்றனர்‌. ஆண் குழந்தை களுக்காவது வெளியில் சென்று விளையாடுவதற்கான இடம் உள்ளது.

ஆனால் பெண் குழந்தைகள் அன்றாட வீட்டு வேலைகளை முடிப்பதற்காக வீடுகளுக்குள்ளே முடங்கிப் போவதால் அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். முக்கியமாக மாணவிகள் தங்களுக்கு நாப்கின்கள் கிடைக்காததால் பெரிதும் துன்பப்பட்டனர். தமிழ் நாட்டில் மதிய உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முட்டை வழங்கப்பட்டது. கோவிட் நோய்த் தொற்றால் இதை அவர்கள் பல மாதங்களாகப் பெறவில்லை. இது மாணவர்களின் ஊட்டச் சத்தில் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 39% க்கும் மேற்பட்ட மாணவர்கள் எடை குறைந்துள்ளனர்.

பெற்றோரின் வேலையிழப்பு மற்றும் வருமானம் குறைந்தது ஆகியவை குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் போனதற்கான முதன்மையான காரணமாகும். சுமார் 49% மாணவர்கள் தாங்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும், 41% அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வகுப்புகளைக் கவனித்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் எப்போதாவது தான் இந்த வகுப்பு களில் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் 56% பேர் இந்த வகுப்புகள் புரிவதில்லை என்றனர். ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வகுப்புகள் உதவிகரமாக இல்லை என்று தமிழ்நாடு அறிவியல் மன்றம் (TNSF) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக மாணவர்கள் ஆசிரியர்களுடனான தொடர்பு இல்லாமல் போனது மாணவர்களின் கற்றல் திறனைப் பாதித்துள்ளது. சுமார் 77% மாணவர்கள் தங்கள் கற்றல் முறையை எளிதாக்குவதற்கு வகுப்பறைகளே பொருத்தமானவை என்று கருதுகின்றனர். வருமானம் இழந்த மக்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் ஆயிரக் கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் அதிகமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.